செவ்வாய்க்கிழமை, மே 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அன்வார்தான் அடுத்த பிரதமர்! இதுவே வாக்குறுதி – துன் மகாதீர்
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

அன்வார்தான் அடுத்த பிரதமர்! இதுவே வாக்குறுதி – துன் மகாதீர்

நியூயார்க், செப். 27-

தமக்கு பிறகு டத்தோஸ்ரீ அன்வார் மலேசியாவில் பிரதமராக பொறுப்பேற்பார் என கூறிய பிரதமர் மகாதீர் இது எனது வாக்குறுதி என்றும் குறிப்பிட்டுள்ளார். செய்தியாளர் பரிட் ஜக்காரியா நடத்திய புலுமெர்க் உலக வர்த்தக 2ஆம் ஆண்டு கலந்துரையாடலில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். நாட்டின் ஆட்சிப் பொறுப்பை புதிய அரசாங்கம் ஏற்றுக் கொண்ட போது அன்வார் சிறையில் இருந்த காரணத்தினால் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ள நான் இணக்கம் தெரிவித்தேன் என்று அவர் கூறினார்.

பிரதமராக நான் அதிக காலம் நீடிக்க மாட்டேன் என வாக்குறுதி அளிக்கிறேன். அநேகமாக 2 ஆண்டுகள் அல்லது அதைவிட கூடுதலான ஆண்டுகள் அல்லது குறைவான ஆண்டுகள்தான் நான் பிரதமராக இருக்கக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.

4 கட்சிகள் அடங்கிய நம்பிக்கைக் கூட்டணியில் ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்பதே முக்கியமாகும். கடந்த காலத்தின் சில நிகழ்வுகள் இந்த ஒத்துழைப்புக்கான சாத்தியத்தை வழங்கவில்லை. ஆகவே நாம் கடந்த கால விஷயங்களை மறந்து விடுவோம். இதற்கு முன்பு பிரதமரை வீழ்த்துவதில் கவனம் செலுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால், கடந்த கால சர்ச்சைகளை நாம் இப்போது மறந்து விட வேண்டும் என அவர் கூறினார்.

மலேசியர்கள் ஒரு புதிய பிரதமரை விரும்பினார்கள். ஆனால் அப்போது அன்வார் சிறையில் இருந்தார். இந்த பழைய பிரதமரை அவர்கள் விரும்பாமல் புதிய பிரதமரையே விரும்பினார்கள். ஆனால், அந்த சமயத்தில் மற்ற தலைவர் சிறையில் இருந்தார். எங்களுக்கு வேறு வழி இல்லை. அதனால் பிரதமர் பதவியை ஏற்க இணக்கம் தெரிவித்தேன். அநேகமாக ஈராண்டுகள் இந்த பதவியில் இருப்பேன்.

அரசாங்க தலைமைத்துவத்திற்கு ஒரு புதிய தலைவர் பொறுப்பேற்பார் எனவும் துன் மகாதீர் தெரிவித்தார். தலைவர்கள் தூய்மையானவர்களாக இருப்பதை உறுதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஒவ்வொரு நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு ஊழல் இருக்கவே செய்கிறது. ஆனால், முடிந்த அளவு குறைந்தபட்ச அளவில் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்பது எங்களின் இலக்கு என்று அவர் குறிப்பிட்டார். பிரதமர் உட்பட அமைச்சர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதில் அரசு முனைப்பு காட்டுகிறது. இவர்கள் அனைவரும் தங்கள் சொத்துக்களையும் வருமானத்தையும் அறிவிக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் இவர்களை கண்காணிக்க மாட்டார்கள். ஆனால் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். லஞ்சத்தை குறைக்க அல்லது ஒழிக்க எங்களால் முடிந்ததை செய்வோம். முன்பிருந்த அரசாங்கம் கொண்டிருந்த மிக மோசமான ஊழலை எங்களால் நிறுத்த முடியும் என மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர் என்று பிரதமர் சொன்னார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன