மஇகா இளைஞர் பகுதித் தேர்தல் : நேருஜிக்கு ஆதரவு பெருகுகின்றது!

கோலாலம்பூர், செப். 29-

மஇகா இளைஞர் பிரிவின் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இன்று மஇகா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் மற்றும் 2 மத்திய செயலவை பதவிகளுக்குமான தேர்தல் நடைபெறுகின்றது.

மஇகா இளைஞர் பிரிவின் தலைவராக தினாளன் ராஜகோபால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேளையில், துணைத் தலைவர் பதவிக்கு ஜோகூர் மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் சுப்ரமணியம் போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து சிலாங்கூர் மாநில இளைஞர் பகுதித் தலைவர் கஜேந்திரன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் போட்டியிடுவதில்லை என அறிவித்துவிட்டார்.

இதனால் சுப்ரமணியம் போட்டியின்றித் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் நடந்த வேட்புமனு தாக்கலின் போது, சுபாஷ் சந்திரபோஸ் துணைத் தலைவர் பதவிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இளைஞர் பகுதியின் துணைத் தலைவர் பதவிக்கு நேரடி போட்டி நிலவும் வேளையில், அப்பிரிவின் 2 மத்திய செயலவை பதவிகளுக்கு 3 பேர் போட்டியிடுகிறார்கள். இதில் பேரா மாநிலத்தின் ஒட்டுமொத்த ஆதரவின் பேரில் களமிறங்கும் நேருஜி இதர 2 வேட்பாளர்களுக்கு கடும் மிரட்டலாக விளங்குகின்றார்.

குறிப்பாக இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்திருந்த தகவல் பிரிவுத் தலைவர் புனிதன், பின்னர் அதிலிருந்து விலகிக் கொண்டு மத்திய செயலவை பதவிக்குப் போட்டியிடுகின்றார். இளைஞர் பகுதியின் மத்திய செயலவை உறுப்பினராக தமிழ்வாணன் அப்பதவியை தற்காத்துக் கொள்ள வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்த இருவரும் தான் அதிகாரப்பூர்வ அணி என சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டாலும் நேருஜிக்கு கணிசமான ஆதரவு கிடைத்துள்ளது. குறிப்பாக முதன்மை மாநிலங்களில் அவருக்கான ஆதரவு பெருகியுள்ளது. இளைஞர் பிரிவின் தேர்தலுக்கு முன்னதாக பேரா மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் பதவியிலிருந்து நேருஜி நீக்கப்பட்டாலும், பேரா மாநில தொகுதிகள் அவருக்கு தொடர்ந்து பக்கபலமாக இருந்து வருகின்றன.

சிறந்த தலைமைத்துவ ஆற்றலை கொண்டுள்ள நேருஜி மத்திய செயலவையில் இடம்பெறும் போது, மலேசிய இந்திய இளைஞர்களின் உரிமைக் குரலாக ஒலிப்பார் என அவருக்கு ஆதரவாக சமூக தளங்களில் கருத்துகள் பரிமாறப்படுகின்றன. போட்டியிடாமல் விலகிக் கொள்வதை காட்டிலும் போட்டியிட்டு தமது நிலையை சோதித்து பார்ப்பது என நேருஜி முடிவு செய்துவிட்டார். சுங்கை சிப்புட்டில் அனைவருக்கும் நன்கு அறிமுகமான நேருஜி தொடர்ந்து சமுதாய சேவையில் ஈடுபட்டு கட்சி இளைஞர்களின் மதிப்பை பெற்றவர்.

அதோடு பல இளைஞர்களுக்கு அவர் வழிகாட்டியாகவும் இருந்து வந்துள்ளார். தலைமைத்துவத்திற்கு தகுதியான நேருஜிக்கு அனைத்து மாநில இளைஞர்களும் பிளவுபடாத ஆதரவை வழங்கி வருகிறார்கள். இந்த ஆதரவானது அவரது வெற்றிக்கு அடித்தளமாக அமையுமென கூறப்படுகின்றது. புனிதன், தமிழ்வாணன் என இருவரில் ஒருவருக்கு வாக்களிக்கும் இளைஞர்கள் தங்களது முதல் தேர்வாக நேருஜியை கொண்டிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. நேருஜியின் இன்றைய வெற்றி கட்சியின் சிறந்த தலைமைத்துவத்தை கொண்ட பல இளைஞர்களுக்கு ஒரு முன்னோடியாக அமையுமென அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

Sent from my iPhone