போர்ட்டிக்சன், செப். 29-

போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று காலை போர்ட்டிக்சன் நகராண்மைக்கழக மண்டபத்தில் நடைபெற்ற போது உள்நாட்டு நாடக நடிகர் எம்ஜிஆர் சுரேஷ் வாசுபிள்ளை அங்கு எம்ஜிஆர் போல் தோன்றினார்.

பெட்டாலிங்ஜெயாவிலிருந்து நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவு தெரிவிக்க அங்கு வந்ததாகக் கூறினார். நான் சுமார் 10 ஆண்டுகளாக எம்ஜிஆர் போல் மேடை நிகழ்ச்சிகளில் தோன்றி கலைப் படைப்புகளில் பங்கேற்று வருகின்றேன். எம்ஜிஆரின் ரசிகையான என்னுடைய தாயார் என் பெயருக்கு முன்னாள் எம்ஜிஆர் எனும் எழுத்துக்களை சேர்த்தார் என்று அவர் கூறினார்.

எம்ஜிஆர் அணிவது போன்ற ஆடைகளை இந்தியாவிலிருந்து நிறைய வாங்கி வந்திருக்கின்றேன். ஏனெனில் மலேசியாவில் அது போன்ற ஆடைகள் விற்கப்படுவதில்லை. எம்ஜிஆர் கவர்ச்சிக்கரமான வர்ணங்களை விரும்பக்கூடியவர். டான்ஸ்ரீ பி.ரம்லியை போன்று அவரும் சிறந்த பண்புகளை பின்பற்றியவர் என்றார் அவர்.

எம்ஜிஆரும் டான்ஸ்ரீ பி.ரம்லியும் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசிக் கொள்வார்கள் என்பதை நான் அறிந்திருக்கின்றேன். பி.ரம்லி போன்று எம்ஜிஆரும் ரசிகர்களின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருப்பார். என்னோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள பலர் விரும்பியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று எம்ஜிஆர் சுரேஷ் கூறினார்.