முகப்பு > முதன்மைச் செய்திகள் > சமயக் கல்வியை கட்டாயப் பாடத்திட்டமாகக் கொண்டு வருவதற்கு தொடர் நடவடிக்கைகள்-ராதாகிருஷ்ணன்
முதன்மைச் செய்திகள்

சமயக் கல்வியை கட்டாயப் பாடத்திட்டமாகக் கொண்டு வருவதற்கு தொடர் நடவடிக்கைகள்-ராதாகிருஷ்ணன்

கோலாலம்பூர், செப் 30
சமயக் கல்வி நம் சமுதாய மாணவர்களுக்கு அவசியமானதாகும். அதனை பள்ளிகளில் கட்டாய பாடத்திட்டமாகக் கொண்டு வர ஒட்டுமொத்த சமுதாயத்தின் ஒத்துழைப்பும் தேவை என்று மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சமயக் கல்வியை தமிழ்ப்பள்ளிகளில் கட்டாயப் பாடத்திட்டமாகக் கொண்டு வருவதற்கு மாமன்றத்தின் சார்பில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுதான் வருகிறோம். அந்த வகையில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் துன் டாக்டர் மகாதீரை சந்திக்க முறையான கடிதம் அனுப்பப்பட்டு விட்டதாகவும் பிரதமர் தரப்பிலிருந்து நல்லதொரு பதில் கிடைக்கும் என்றும் தாங்கள் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று புடுவிலுள்ள சிக்னிச்சர் விடுதியில் சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான இந்து தர்ம ஆசிரியர் பயிற்சியின் நிறைவு விழாவில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

கடந்த 1999ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சமயக் கல்வி திட்டம் இன்று வரை தொடரப்படுகிறது. மாணவர்களுக்கு பள்ளிகளிலும் சமயக் கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் சமயக் கல்வி முழுமையாக மாணவர்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது என்று இந்து தர்ம மாமன்றத்தின் துணைத் தலைவர் சுப்ரமணி தெரிவித்தார்.

மாணவர்களுக்கென பிரத்தியேகமாக பாடப்புத்தகங்களும் தயாரிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க முன்மாதிரி நூல்களும் தயாரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி ஆலயங்களில் சமயக் கல்வி கற்றுக் கொடுப்பதற்கும் புத்தங்கள் வழங்கப்படுகிறது. பல மாநிலங்களில் தமிழ்ப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான இந்து தர்ம ஆசிரியர் பயிற்சி முகாம் தொடர்ந்து நடத்தப்படும் என்று சமயக் கல்வி பாடக் குழுவின் தலைவருமான அவர் சொன்னார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன