நஜிப் அவரது தந்தையைப் போல் இல்லை என்பதில் வருத்தம் அடைந்தேன்- மஹாதீர்

0
5

லண்டன், அக்.2-

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் அவரது தந்தை துன் அப்துல் ரசாக்கைப் போல் இல்லை என்பதை அறிந்து தாம் வருத்தம் அடைந்ததாக பிரதமர் துன் டாக்டர் மஹாதீர் தெரிவித்துள்ளார். துன் ரசாக், கிராமப்புறங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்குவதற்காக பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைக் கொண்டு வந்தார்.

ஆனால் நஜிப் அவ்வாறு செயல்படவில்லை என மஹாதீர் கூறினார். நஜிப்பைப் பொறுத்தவரை பணம் மட்டுமே ராஜா என்பதில் அவர் குறியாக இருந்தார். பணம் இருந்தால் எதனையும் செய்ய முடியும். பணம் இல்லை என்றால் அதற்காக திருட வேண்டும் என பிரிட்டனில் மலேசிய ஊடகவியலாளர்களைச் சந்தித்த மஹாதீர் கூறினார்.

நஜிப்பின் நிர்வாகத்தில் அரசாங்க கேந்திரத்தில் நடந்த முறைக்கேடுகள் மற்றும் சேதங்கள் குறித்து தாம் பெரும் அதிருப்தி அடைந்துள்ளதாக மஹாதீர் தெரிவித்தார். குறிப்பாக அரசாங்க அதிகாரிகளைத் தேர்தல் பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்தியதையும் அவர் சுட்டி காட்டினார்.

1981 ஆம் ஆண்டில் தாம் முதல் முறையாக பிரதமராக பதவியேற்றப் போது, இத்தகைய பிரச்சினை எழவில்லை என மஹாதீர் மேலும் தெரிவித்தார். அதோடு அரசாங்க நிர்வாகமும் சிறப்பான முறையில் செயல்பட்டதாக அவர் கூறினார். இதனிடையே போர்ட் டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நிச்சயம் வெற்றி பெறுவார் என மஹாதீர் நம்பிக்கைத் தெரிவித்துள்லார்.

அக்டோபர் 13 ஆம் தேதி நடைபெறவிருக்கும் அந்த இடைத் தேர்தலில் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்காளர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டு அன்வாரின் வெற்றிக்கு வழி வகுக்கும் என அவர் கூறினார். அதேவேளையில் அன்வாருக்காக அந்த தொகுதி காலி செய்யப்பட்டது சட்ட ரீதியில் தவறு இல்லை என்றும் மஹாதீர் கூறினார்.