பி.கே.ஆர் மீதும் புகார் செய்யப்பட்டதா ?? பெர்சேவுக்கு நஜிப் கேள்வி!

0
3

கோலாலம்பூர், அக்.2 –

சுங்கை கண்டிஸ் இடைத் தேர்தலின் வாக்களிப்பு நாளில் தாம் முகநூல் வழியாக பிரச்சாரம் மேற்கொண்டதாக புகார் செய்துள்ள பெர்சே அமைப்பு, பி.கே.ஆர் வேட்பாளர் மீதும் புகார் செய்துள்ளதா என முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் தமது முகநூலில் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுங்கை கண்டிஸ் இடைத் தேர்தலில் நடைபெற்ற நாளில், நஜிப் தமது முகநூலில் பிரச்சாரம் செய்யும் வகையில் கருத்துகளை பதிவிட்டதாக பெர்சே அமைப்பு புகார் செய்ததை அடுத்து அவர் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என போலீஸ் அறிவித்திருந்தது.  இந்த விவகாரத்தில் தாம் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக நஜிப் தெரிவித்தார்.

அதேவேளையில், தேர்தல் நாளில் பி.கே.ஆர். வேட்பாளர் முஹமட் சவாவி முகுனியும் கடுமையான தேர்தல் குற்றங்களைப் புரிந்திருப்பதாக குற்றஞ்சாட்டிய பெர்சே அமைப்பு அவர் மீது ஏன் போலீஸ் புகார் செய்யவில்லை என நஜிப் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் பெர்சே நியாயமாக நடந்து கொள்வதை உறுதிச் செய்ய அந்த அமைப்புக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என நஜிப் கூறினார்.

சுங்கை கண்டிஸ் இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு மையங்களில் ஒன்றான ஆரம்ப்பள்ளி ஒன்றில், முஹமட் சவாவி பிரச்சாரங்கள் மேற்கொண்டதாக வெளிவந்திருக்கும் புகார்களை விசாரிப்பதாக பெர்சே கூறியது. அது தொடர்பாக அன்றைய தினம் வெளிவந்த செய்திகளை நஜிப் தமது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.