நஜிப்பை மீண்டும் விசாரணைக்கு அழைத்தது போலீஸ் !

0
5

கோலாலம்பூர், அக்.3-

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் இன்று காலை ஆம்லா எனப்படும் அரச மலேசிய போலீஸ் படையின் சட்டவிரோத பண பரிமாற்றம் விசாரணைப் பிரிவு மீண்டும் விசாரணை நடத்தியது. காலை 10  மணி அளவில் நஜிப், மெனாரா கே.பி.ஜே-வில் உள்ள ஆம்லா அலுவலகத்துக்கு வந்தடைந்தார்.

எனினும் நஜிப் , அந்த கட்டிடத்தின் பின்புறமாக உள்ளே கொண்டு செல்லப்பட்டதாக போலீஸ் வட்டாரம் தெரிவித்தது. நஜிப்புக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ லொக்மான் நோர் ஆடாமும் சில ஆதரவாளர்களும் மெனாரா கே.பி.ஜே கட்டிடம் முன்பு கூடியிருந்தனர்.

ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தில் நடந்துள்ள முறைக்கேடுகள் தொடர்பில் நஜிப்பிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டுக்கான சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான நிதியளிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் நஜிப்பிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் தொடர்பான விசாரணை முழுமைப் பெற நஜிப்பிடம் மேலும்  விசாரணை நடத்தப்படும் என புக்கிட் அமான் வர்த்தக குற்றவியல் விசாரணைத் துறையின் இயக்குனர் டத்தோ ஶ்ரீ அமார் சிங் இஷார் சிங் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தெரிவித்திருந்தார்.

இதுவரை ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அருள்கந்தா உட்பட 70-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அமார் சிங் மேலும் தெரிவித்தார். இதற்கு முன்னர்,  சட்டவிரோத பண பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பில் நஜிப் மீது 21 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.