குணவதி படுகொலை: 36 வயது நபர் கைது! கத்தியை வாங்கியதாக ஒப்புதல்

சிரம்பான், அக். 3-

தாமான் சிரம்பான் ஜெயா பாசா 10 எனும் குடியிருப்பில் 39 வயது குணவதி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒரு நபர் போலிசரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

செவ்வாய்க்கிழமை இரவு அந்த நபர் கைதானதாக போலீஸ் வட்டாரங்கள் கூறின. ஜாலான் சிரம்பான் தங்கும் விடுதியில் 36 வயதான அந்த நபர் இரவு 10.30 மணியளவில் பிடிபட்டார். இந்த கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஹோன்டா இஎக்ஸ் 5 ரக மோட்டார் சைக்கிளையும் குணவதியின் கைப்பேசியையும் சிம் கார்டையும் போலீஸ் கைப்பற்றியது.

அதோடு, குணவதிக்கு சொந்தமானது என நம்பப்படும் நகைகளை விற்றதற்கான 950 வெள்ளிக்கான ரசீது 700 வெள்ளி ரொக்கம் பணம் ஆகியவற்றையும் போலீஸ் கைப்பற்றியது. பிடிபட்டவரின் மோட்டார் சைக்கிளில் ஆடைகளும் சவர கத்தியும், பண நோட்டுகளும், ஒரு போத்தல் மதுபானமும் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இந்த கொள்ளை, கொலை சம்பவத்தில் ஈடுபட்டதை அவன் ஒப்புக் கொண்டதாக பூர்வாங்க விசாரணை காட்டுகிறது. அதோடு சிரம்பான் நகரிலுள்ள ஒரு கடையில் வாங்கிய காகிதம் வெட்டும் கத்தியை கொலைக்கு பயன்படுத்தியதையும் அவன் ஒப்புக் கொண்டதாகத் தெரிய வருகிறது.

கைது செய்யப்பட்டபோது அவன் மதுபோதையில் இருந்திருக்கின்றான் எனவும் கூறப்படுகிறது. போதைப் பொருள், திருட்டு தொடர்பில் அவன் மீது ஏற்கெனவே 2 குற்றப் பதிவுகள் உள்ளன. நேற்று முன்தினம் பகல் 1.30 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையனால் குணவதி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.