புத்ரா ஜெயா, அக். 3-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் ஊழல் தடுப்பு ஆணையத்தினால் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

இன்று காலை 10.40க்குத் தமது வழக்கறிஞர் டத்தோ கே.குமரேந்திரனோடு ஊழல் தடுப்பு ஆணய தலைமையகத்துக்கு வாக்குமூலம் தர வந்திருந்த ரோஸ்மா பிற்பகல் 3.20 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

அவர் நாளை வியாழக்கிழமை செஷன்ஸ் நீதிமன்றத்தில் பண மோசடி தடுப்புச் சட்டம், தீவிரவாதம், நிதியியல் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கையில் பணம் சேர்த்தல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றம் சுமத்தப்படுவார் என கூறப்படுகின்றது.

முன்னதாக அவரின் கணவர் நஜீப் மீதும் அதே மாதிரியான 32 குற்றச்சாட்டுகளும் தமது வங்கிக் கணக்கில் எஸ்ஆர்சியின் பணத்தைச் செலுத்திய வழக்கும் சுமத்தப்பட்டுள்ளது.

ஜூன் 5இல் 1எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவன நிதி மோசடி விவகாரம் பற்றி ரோஸ்மாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கடந்த வாரம் 1எம்டிபி சம்பந்தமான ஊழல் விவகாரத்தில் ரோஸ்மா 13 மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள மெனாரா கேபிஜேவில் உள்ள புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வு இலாகாவில் இன்று நஜீப் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.