செவ்வாய்க்கிழமை, மே 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > உறவு முறையின் மகத்துவத்தை உணர்த்தும் ‘ஏகாந்தம்!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

உறவு முறையின் மகத்துவத்தை உணர்த்தும் ‘ஏகாந்தம்!

கோலாலம்பூர், அக். 3-

அன்னைத் தமிழ் சினிமாஸ் தயாரித்துள்ள ஏகாந்தம் திரைப்படம் மலேசிய ரசிகர்களை வெகுவாகக் கவருமென அதன் இயக்குநர் ஆர்செல் ஆறுமுகம் கூறினார். மனித வாழ்க்கையில் மறைந்து போகும் உணர்வுகளையும் உறவு முறைகள் குறித்தும் இத்திரைப்படத்தில் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இத்திரைப்படம் கடந்த வாரம் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டு மக்களின் மத்தியில் மகத்தான ஆதரவு பெற்றது. குறிப்பாக திருப்பத்தூர் பகுதியில் அரங்கம் நிறைந்த காட்சியாக இத்திரைப்படம் ஒளியேறியது. இந்த திரைப்படத்தை மலேசியர்களும் காண வேண்டுமென்ற நோக்கத்திற்காக இத்திரைப்படத்தை மலேசியாவிலும் வெளியிடுவதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இத்திரைப்படத்தை மலேசியாவில் வெளியிடுவதற்கு முழுமையான ஆதரவு தெரிவித்த டி சினிமா மாராஸ் ரவிக்கும் இயக்குநர் ஆறுமுகம் நன்றியினை தெரிவித்துக் கொண்டார். இத்திரைப்படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளார். யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளார்.

இத்திரைப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளன. அவை அனைத்தும் வித்தியாசமான மற்றும் பல சூழ்நிலைகளை உள்ளடக்கிய பாடல்களாக இருக்கும். ஏகாந்தம் மக்களின் வாழ்வியல் முறை, தமிழரின் பண்பாடு, கலாசாரம் மற்றும் சித்த மருத்துவம் பற்றிய பெருமைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

நாகரிகம், நகர வளர்ச்சி என்ற பெயரில், குடிக்கும் தண்ணீரைக் கூட பலவகைகளில் கையாளுகிறோம். முன்பெல்லாம் முன்னோர்கள் மற்றும் தெய்வங்களின் பெயர்களை நம் குழந்தைகளுக்கு வைத்து மரியாதை செய்தோம். ஆனால் இன்று அர்த்தம் இல்லாத பெயர்களை பிள்ளைகளுக்கு சூட்டி வருகிறோம்.

அக்கம் பக்கத்து வீட்டாரைத் தெரிந்து கொள்ளாமலே நாகரிகம் என்ற பெயரில் பாதுகாப்பு கருதி தனித்து வாழ பழகிக் கொண்டோம். குடும்பமாய் உணவு உண்ணும் நடைமுறையையும் மறந்து விட்டோம். அக்கா, தம்பி, அண்ணன், தங்கச்சி என்ற உறவு முறைகளில் உள்ள பாசப்பிணைப்பு மாறிவிட்டது. இப்படி பல அம்சங்கள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தை பார்க்கும் போது, கிராமத்து வாழ்க்கையை தொலைத்து, நகர வாழ்க்கையை தேர்ந்தெடுத்தவர்கள் நிச்சயம் கண் கலங்குவார்கள் என ஆறுமுகம் கூறினார். இம்வாரம் வெள்ளிக்கிழமை முதல் லோட்டஸ் திரையரங்குகளில் ஏகாந்தம் திரைப்படத்தை காணலாம். முன்னதாக வியாழக்கிழமை என்யு சென்ரல், குயின் சிட்டி மால்லில் இத்திரைப்படத்தை காணலாம் என்ற அவர் மேலும் கூறினார்.

தலைநகரில் நடந்த இந்த ஏகாந்தம் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர், தயாரிப்பாளர், கதாநாயகி ஆகியோர் கலந்து கொண்டார்கள். ஏகாந்தம் மண் சார்ந்த படைப்பு மட்டுமல்ல மனிதம் சார்ந்த படைப்பு என தயாரிப்பாளர் அ. ஆறுமுகம் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன