திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > மெஸ்சியின் மாய ஜாலத்தில் வீழ்ந்தது டோட்டேன்ஹம் !
விளையாட்டு

மெஸ்சியின் மாய ஜாலத்தில் வீழ்ந்தது டோட்டேன்ஹம் !

லண்டன், அக்.4-

2018/19 ஆம் பருவத்துக்கான ஐரோப்பிய வெற்றியாளார் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயினின் பார்சிலோனா 4 – 2 என்ற கோல்களில் இங்கிலாந்தின் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் பார்சிலோனாவின் லியோனெல் மெஸ்சி இரண்டு கோல்களைப் போட்டு அதிரடிப் படைத்துள்ளார்.

ஆக கடைசியாக 2011 ஆம் ஆண்டில் வெம்பிளி அரங்கில் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பார்சிலோனாவுடன் களம் கண்ட மெஸ்சி அப்போது மென்செஸ்டர் யுனைடெட்டுக்கு எதிராக கோல் அடித்து பார்சிலோனாவை வெற்றிக்கு இட்டுச் சென்றார். இந்நிலையில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்திலும் பார்சிலோனாவின் வெற்றிக்கு மெஸ்சி, சூத்திரதாரியாக செயல்பட்டார்.

ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்தில் , பிலிப்பே கோத்தின்ஹோ போட்ட கோலின் மூலம் பார்சிலோனா 1 – 0 என முன்னணிக்குச் சென்றது. 28 ஆவது நிமிடத்தில் ஈவான் ரக்கிதிச் போட்ட கோலின் வழி பார்சிலோனா தனது நிலையை மேலும் வலுப்படுத்தியது.

ஸ்பெயின் லா லீகா போட்டியில் தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற தவறியுள்ள பார்சிலோனா இரண்டாவது பாதி ஆட்டத்தில் மேலும் அதிரடியாக விளையாடியது.  52 ஆவது நிமிடத்தில் ஹாரி கேன், டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரின் முதல் கோலை அடித்தார். இதனால் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் மேலும் அதிரடியாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் ரசிகர்கள் ஏமாற்றமே அடைந்தனர். 56 ஆவது நிமிடத்தில் லியோனெல் மெஸ்சி தனது கோல் கணக்கைத் தொடங்கினார். 66 ஆவது நிமிடத்தில் எரிக் லமேலா, டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் அணிக்கு ஒரு கோலைப் போட்டிருந்தாலும் ஆட்டத்தின் இறுதி நிமிடங்களிலும் மெஸ்சி போட்ட கோல் பார்சிலோனாவின் வெற்றியை உறுதிச் செய்தது.

பி பிரிவில் பார்சிலோனா ஆறு புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ள வேளையில் இண்டர் மிலான் மூன்று புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வி கண்ட டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் அடுத்த சுற்றுக்குத் தேர்வுப் பெற கடும் போராட்டத்தை சந்திக்கவுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன