திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > கஸானா சுதந்திரமாக செயல்படும்! – துன் டாக்டர் மகாதீர்
அரசியல்முதன்மைச் செய்திகள்

கஸானா சுதந்திரமாக செயல்படும்! – துன் டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர், அக். 5-

அரசின் நிறுவனமான கஸானா இருந்தாலும் அது சுயேச்சையாகத் தொழிலில் ஈடுபட சுதந்திரமும் உரிமையும் கொண்டிருப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார்.

கஸானாவும் அதன் துணை நிறுவனமான சில்டெராவும் மூன்றாவது தேசிய கார் தொழிலில் ஈடுபடுத்தப்படும் சாத்தியம் உள்ளதாகக் குறிப்பிட்ட மசீச வின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங், அந்த துணை நிறுவனம் நட்டத்தில் இயங்கி வருவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

தேவையில்லாமல் அரசின் பணம் செலவிடப்படாது எனும் அரசின் வாக்குறுதிக்கு முரணாக இந்தச் செயல் இருப்பதாகவும் வீ சாடியுள்ளார்.

அதற்கு மறுமொழி கூறியிருக்கும் மகாதீர், கஸானாவும் சில்டெராவும் சுதந்திரமாகத் தொழிற்துறையில் ஈடுபட உரிமை கொண்டிருப்பதாகவும் 3ஆவது கார் தயாரிப்பில் ஈடுபாடு காட்டும் எந்த நிறுவனமும் அதில் பங்கெடுத்துக் கொள்ள வரவேற்கப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

யயாசான் அல் புஹாரி கட்டடத்தில் பக்கத்தான் தலைமைத்துவ மன்றத்தின் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், மகாதீர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

அதோடு பகாங், கெபெங் தொழிலியல் வளாகத்தில் அமைந்திருக்கும் லீனாஸ் நிறுவன ஆய்வு செயற்குழுவில் குவாந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் பூஃஸியா சாலே மற்றும் பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் தாக் ஆகியோரைச் சேர்த்திருப்பதை மகாதீர் தற்காத்துப் பேசியுள்ளார்.

தாது மணல் உற்பத்தி நிறுவனமான லீனாஸை மேற்கண்ட இருவரும் கடுமையாகத் தாக்கிப் பேசி வந்திருப்பதாகவும், தற்போது ஆய்வுக் குழுவில் அவர்களைச் சேர்த்திருப்பதால் தங்களின் பணியை நேர்மையாகச் செய்வார்களா என மசீசாவின் தி லியான் கெர் கேள்வி எழுப்பியிருந்தார்.

பிரதமர் துறையின் சமய விவகாரத் துணையமைச்சரான புஃஸியா அந்த 10 பேர் கொன்ட ஆய்வுக் குழுவிற்கு தலைமையேற்கவிருக்கிறார். அந்தக் குழுவில் மொத்தம் 10பேர் இருப்பதாகவும் புதிதாக நியமனம் பெற்ற இருவர் மற்ற 8 பேரை கட்டுப்படுத்த முடியாது என மகாதீர் குறிப்பிட்டார்.

அந்த தாது மணல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையைப் பற்றி சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வந்துள்ளனர். அது ஆபத்தை விளைவிக்கும் கதிர்வீச்சுக் கழிவுப் பொருளை உற்பத்தி செய்வதாகவும் அவர்கள் தெரிவித்து வந்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன