கோலாலம்பூர், அக். 6
தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுப்அட்டதாக நம்பப்படும் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் எழுவர் அந்நிய பிரஜைகளாவர். மேலும் ஒருவர் உள்நாட்டை சேர்ந்தவராவார்.

பெர்லிஸ், கோலாலம்பூர், ஜோகூரில் ஆகிய மாநிலங்களில் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் போலீஸ் படையின் தீவிரவாத தடுப்பு பிரிவு அவர்களை கைது செய்ததாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமது ஃபூசி ஹருண் தெரிவித்தார்.

பெர்லிஸிலுள்ள இஸ்லாமிய கல்வி மையத்துடன் இவர்கள் தொடர்பில் இருந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார்.

அந்த மையத்தின் மாணவர்களாகவும், முன்னாள் ஆசிரியர்களாகவும், முன்னாள் மாணவர்களாகவும் இருந்துள்ளனர். ஏமன் நாட்டிலுள்ள சலாபி ஜிஹாடி எனும் சித்தாந்தத்தை பின்பற்றும் ஒரு தீவிரவாத கும்பலின் முயற்சி தொடர்பில் போலீஸ் பெற்ற சில தகவல்கள் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

இந்த சித்தாந்தத்தை தென்கிழக்காசியாவில் பரப்புவதற்கு இஸ்லாமிய கல்வி மையத்தை அமைக்க இவர்கள் முயன்றதாகவும் சலாபி ஜிஹாடி எனும் தீவிரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவரான ஷேய்க் முக்பில் பின் ஹடி அல்வடி என்பவர் அமைத்த ஏமனிலுள்ள டம்மாஜ் நகரில் செயல்படும் மத்ரஸாவுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

தீவிரவாத அமைப்பின் தலைவர் எழுதிய நூல்கள் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன. இச்சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் ஃபூசி ஹருண் தெரிவித்தார்.