போர்ட்டிக்சன், அக். 8-

கலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதன் வாயிலாக தான் விதிமுறைகளை மீறியதாகக் கூறியிருக்கும் தேர்தல் ஆணையம் (எஸ்.பி.ஆர்.) மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆகியவற்றை போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் வேட்பாளர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வன்மையாகச் சாடினார்.

சட்டம் மற்றும் விதிமுறைகளை நாங்கள் பின்பற்றி வருகிறோம். அதோடு, எஸ்.பி.ஆர் மற்றும் பெர்சேவை நாங்கள் மதிக்கிறோம்” என்று இங்கு லுக்குட் அருகே மாநில சட்டமன்ற மண்டபத்தில் நடைபெற்ற விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

அவர்கள் தங்கள் பதவியை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது. எல்லை மீறி நடக்க வேண்டாம் என்று நான் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார் பி.கே.ஆர் பொதுத் தலைவருமான அன்வார்.

கடந்த சனிக்கிழமை நடந்த அந்தக் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற வேண்டாம் என்று பெர்சே அன்வாருக்கு ஆலோசனை கூறியது. இது எஸ்.பி.ஆர் விதிமுறைகளுக்கு முரணாக உள்ளது என்று சில தரப்பினரும் குறை கூறினர்.

இதனைத் தொடர்ந்து அன்வாரின் நடவடிக்கைகளைச் சோதனையிடும்படி பெர்சே தேர்தல் ஆணையத்தைப் பணித்தது. சுமார் 2,000 பேர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் டத்தின்ஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா இஸ்மாயிலும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்காப்பு அமைச்சர் முகமது சாபுவின் வாகனத்தில் தான் ஏறியதோடு அரசாங்க வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டதற்கு எதிராகவும் அன்வார் தற்காத்து பேசினார். நான் மாட் சாபுவுடன் பேச நினைத்தேன். அதற்கு நேரமில்லை. அவர் வீடு திரும்பியதால் அவருடன் நானும் அவரின் காரில் புறப்பட்டேன்” என்றார் அன்வார்.

நான் அவரின் காரில் ஏறியபோது அது தவறு என்று சொல்கிறார்கள். ஆனால், அவரும் எனது காரில் ஏற முடியாது. அது ராணுவ பணி வழக்க நடைமுறையாகும்” என்றார் அவர்.

ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்காகவே நான் அவரின் காரில் ஏறினேன். இது தவறு என்று கூறுகின்றனர்” என்று அன்வார் மேலும் சொன்னார்.

நியாயமான மற்றும் தூய்மையான தேர்தல் கோட்பாட்டைத்தான் மதிப்பதாகவும் அந்த நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட உணவுக்கான செலவை தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார். நான் வேட்பாளர். என்னை அந்நிகழ்ச்சிக்கு அழைத்தனர். உணவு செலவை நான் ஏற்கவில்லை. இதனை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கின்றேன்” என்றார் அன்வார்.