முகப்பு > விளையாட்டு > 100 கோடி பவுண்ட் தொகையில் புதிய ஆட்டக்காரர்கள் : விறுவிறுப்புடன் தொடங்குகிறது இங்கிலீஷ் பிரீமியர் லீக்
விளையாட்டு

100 கோடி பவுண்ட் தொகையில் புதிய ஆட்டக்காரர்கள் : விறுவிறுப்புடன் தொடங்குகிறது இங்கிலீஷ் பிரீமியர் லீக்

லண்டன், ஆக.11 –

2017/18 ஆம் பருவத்துக்கான இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டி வெள்ளிக்கிழமை அதிகாரபூர்வமாக தொடங்கிய வேளையில் புதிய பருவத்தை முன்னிட்டு பிரீமியர் லீக் கிளப்புகள் 100 கோடி பவுண்ட் தொகையை செலவிட்டுள்ளன.

தொலைக்காட்சி ஒளிபரப்பின் மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் அதிகமான நிதி ஆதரவினால் பிரீமியர் லீக் கிளப்புகள் செலவு செய்வதற்கு அஞ்சுவதில்லை.
ஒவ்வொரு பருவத்திலும் புதிய ஆட்டக்காரர்களை ஒப்பந்தம் செய்ய கோடிகணக்கான பணத்தை முன்னணி கிளப்புகள் செலவிடுகின்றன.

புதிய ஆட்டக்காரர்களை ஒப்பந்தம் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முடிவடையவிருக்கும் வேளையில், அதற்குள் 100 கோடி பவுண்ட் தொகை செலவிடப்பட்டிருப்பது ஐரோப்பிய மண்டலத்தில் உள்ள இதர லீக் போட்டிகளுக்கு அதிர்ச்சியைத் தரும் செய்தியாக உள்ளது.

நடப்பு வெற்றியாளரான செல்சியை முந்த வேண்டும் என்ற நோக்கத்தில் மென்செஸ்டர் 
யுனைடெட் 7 கோடியே 50 லட்சம் பவுன்ட் தொகைக்கு எவெர்டனில் இருந்து ரொமேலு லுக்காகூவை விலக்கி வாங்கியுள்ளது. அதேவேளையில் அர்செனல், 5 கோடியே 20 லட்சம் பவுண்ட் தொகைக்கு லியோனில் இருந்து அலெக்சாண்டர் லக்காசாட்டை இறக்குமதி செய்திருக்கிறது.

 

லிவர்புலும் இதர கிளப்புகளுக்கு சற்றும் குறைவில்லாமல் 3 கோடியே 70 லட்சம் பவுண்ட் தொகைக்கு இத்தாலியின் ஏ.எஸ். ரோமாவில் இருந்து முஹமட் சாலாவை வாங்கியுள்ளது. இந்த கிளப்புகள் அனைத்தையும் தூக்கி சாப்பிடும் வகையில் மென்செஸ்டர் சிட்டி நிர்வாகி பெப் குவார்டியோலா 21 கோடியே 80 லட்சம் பவுண்ட் தொகையை செலவிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் முதல் பருவத்தில் பெரும் பின்னடைவை சந்தித்த குவார்டியோலா புதிய பருவத்தில் கேயில் வால்கர், பெஞ்சமின் மென்டி, டானிலோ, கோல் காவலர் எடேர்சன் , மத்திய திடல் ஆட்டக்காரர் பெர்னார்டோ சில்வாவை விலைக்கு வாங்கியுள்ளார்.

                                            

குவார்டியோலாவின் பரம வைரியான மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி ஜோசே மொரின்ஹோ, போர்ச்சுகலின் பென்பிக்கா கிளப்பில் இருந்து விக்டர் லின்டாலோப்பையும், செல்சியில் இருந்து நெமாஞ்சா மாத்திச்சையும் விலைக்கு வாங்கியுள்ளார்.

இதுவரை தாம் நிர்வகித்த கிளப்புகளில் ஜோசே மொரின்ஹோ ( செல்சி, இண்டர் மிலான், ரியல் மெட்ரிட் ) இரண்டாவது பருவத்தில் லீக் பட்டத்தை வென்றிருக்கிறார். எனினும் மென்செஸ்டர் யுனைடெட்டுடனான இரண்டாவது பருவத்தில் லீக் பட்டத்தை வெல்ல கடும் சவாலை சந்திக்ககூடும் என மொரின்ஹோ கூறுகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன