திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > சவுத்ஹாம்ப்டனின் வேதனையை அதிகரித்தது செல்சி ; வெளுத்து கட்டுகிறது அர்செனல் !
விளையாட்டு

சவுத்ஹாம்ப்டனின் வேதனையை அதிகரித்தது செல்சி ; வெளுத்து கட்டுகிறது அர்செனல் !

லண்டன், அக்.8-

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் செல்சி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 2017 ஆம் ஆண்டில் பிரீமியர் லீக் கிண்ணத்தை வென்ற செல்சி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 3 – 0 என்ற கோல்களில் சவுத்ஹாம்ப்டனை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் செல்சியின் வெற்றிக்கு அதன் மத்திய திடல் ஆட்டக்காரர் எடின் ஹசார்ட் மீண்டும் துருப்புச் சீட்டாக விளங்கினார். முதல் பாதி ஆட்டத்தின் 30 ஆவது நிமிடத்தில் செல்சியின் முதல் கோலை எடின் ஹசார்ட் போட்டார். அந்த கோலானது இந்த பருவத்தில் பிரீமியர் லீக் போட்டியில் ஹசார்ட் போட்டிருக்கும் ஏழாவது கோலாகும்.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் செல்சியின் இரண்டாவது கோலை ரோஸ் பார்க்கலி போட்ட வேளையில், அல்வாரோ மொராத்தா மூன்றாவது கோலைப் போட்டார். இந்த பருவத்தில் இதுவரை நடைபெற்ற எட்டு பிரீமியர் லீக் ஆட்டங்களில் தோல்வி காணாமல் செல்சி தொடர்ந்து பீடுநடைப் போட்டு வருகிறது.

இதனிடையே கிராவான் கோட்டஜ் அரங்கில் நடந்த ஆட்டத்தில் அர்செனல் 5 – 1 என்ற கோல்களில் புல்ஹாம்மை வீழ்த்தியது. புதிய நிர்வாகி உனய் எமெரியின் கீழ் அர்செனல் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 29 ஆவது நிமிடத்தில் அலெக்சாண்டர் லக்காசாட் மூலம் அர்செனல் தனது முதல் கோலைப் போட்டது.

எனினும் 44 ஆவது நிமிடத்தில் ஆன்ட்ரீ ஸ்ரூல் போட்ட கோலின் வழி புல்ஹாம் ஆட்டத்தை சமப்படுத்தியது. இரண்டாம் பாதியில் மேலும் அதிரடியாக அர்செனல் லக்காசாட் மூலம் இரண்டாவது கோலைப் போட்டது. ஏரோன் ரம்சே மூன்றாவது கோலைப் போட்ட வேளையில், பியேரி அவ்பாமேயாங் போட்ட இரண்டு கோல்கள் அர்செனலின் மிகப் பெரிய வெற்றியை உறுதிச் செய்தது.

இந்த வெற்றியின் மூலம் அர்செனல் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறிய வேளையில், புல்ஹாம் பட்டியலில் 17 ஆவது இடத்துக்கு இறக்கம் கண்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன