கோலாலம்பூர், அக். 9-
துன் டாக்டர் மகாதீர் தலைமையிலான நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் கீழ் தீபாவளிக்கு இரண்டு நாள் பொதுவிடுமுறை கிடைக்குமா என்று பேரின்பம் மலேசியா இயக்கத்தினர் நேற்று கேள்வி எழுப்பினர்.

இந்நாட்டில் பல இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் ஹரிராயா, சீனப் பெருநாட்களுக்கு இரண்டு நாள் பொது விடுமுறை வழங்கப்படுகிறது.

இதே போன்று தீபாவளிக்கும் இரண்டு நாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக இந்திய சமுதாயத்தினர் போராடி வருகின்றனர்.

இரண்டு நாள் விடுமுறை விவகாரம் தொடர்பில் கடந்த கால அரசாங்கத்திடம் பல மகஜர்கள் வழங்கப்பட்டது. இம்மகஜர்களை பெற்றுக் கொண்டவர்கள் இதுநாள் வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்ைலை.

பேரின்பம் மலேசியா போன்று பல இயக்கங்களின் பிரதிநிதிகளும் தீபாவளிக்கு இரண்டு நாள் விடுமுறை கிடைக்க வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

அம்முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் தான் முடிகின்றன. இது இந்திய சமுதாயத்திற்கு மிகப் பெரிய ஏமாற்றமாகவே இருந்து வருகிறது.

இந்தவொரு சுழ்நிலையில் துன் டாக்டர் மகாதீர் தலைமையில் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் மலேசியாவில் ஆட்சிப் புரிந்து வருகிறது.

நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் 85 விழுக்காடு இந்திய மக்கள் நம்பிக்கைக் கூட்டணிக்கு தங்களது முழு ஆதரவை வழங்கியுள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

அதன் அடிப்படையில் இவ்வாண்டாவது தீபாவளிக்கு இரண்டு நாட்கள் பொது விடுமுறை வழங்கப்படும் என மிகப் பெரிய நம்பிக்கையில் இந்திய சமுதாயம் உள்ளது.

அப்படி வழங்கப்பட்டால் அதுவே நம்பிக்கைக் கூட்டணியின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் இந்திய சமுதாயத்திற்கு கிடைக்கும் மகத்தான தீபாவளி பரிசாக இருக்கும் என்று தாமோதரன் செய்தியாளர்களிடம் கூறினார்.