மலேசியாவில் மீண்டும் தாய்க்குடம் பிரிச்சின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி

0
22

கோலாலம்பூர், அக் 9

மலேசிய இசை ரசிகர்களை மகிழ்விக்க உலகின் முன்னணி இசை கலைஞர்களான தாய்க்குடம் பிரிச் குழுவினர் மலேசியாவிற்கு வருகை தரவிருக்கின்றார்கள். இவர்களுடன் உரசாதே புகழ் விவேக் மெர்வின் ஜோடியும் கலக்கவிருக்கின்றார்கள். இதனை இசை மிஸ்சிக் ஃபெஸ்டிவல் ஏற்பாடு செய்துள்ளது என ஃபாங்கி சங்கர் கூறினார்.

தனிநபர் அல்லது குழு இசை நிகழ்ச்சிகளுக்கு மலேசியர்கள் மகத்தான ஆதரவை வழங்கி வருகிறார்கள். மோஜோ இசை நிகழ்ச்சிகளுக்கு கிடைக்கும் ஆதரவு அதற்கு சிறந்த உதாரணமாகும். அந்த பாணியை பின்பற்றி நாங்கள் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யவில்லை. இது முற்றிலும் மாறுபட்ட பாணியிலான இசை நிகழ்ச்சியென அவர் குறிப்பிட்டார்.

இசைஞானி இளையராஜாவின் ரசிகர்கள் தாய்க்குடம் பிரிச் இசைக் குழுவை அறியாமல் இருக்க மாட்டார்கள். முன்னதாக மோஜோ இசை நிகழ்ச்சியில் இவர்கள் கலந்து கொண்டபோது மலேசிய ரசிகர்கள் மகத்தான ஆதரவை வழங்கினார்கள். அதன் பிறகு அவர்கள் மலேசியாவில் இசை நிகழ்ச்சியை நடத்தவில்லை. தாய்க்குடம் பிரிச்சின் இசை நிகழ்ச்சியை நேரடியாகக் காண வேண்டுமென மலேசிய ரசிகர்கள் சில ஆண்டுகாலமாகவே காத்திருக்கின்றார்கள்.

அவர்களது பல பாடல்களை சமூக தளங்களில் பகிர்ந்து நேரடியாக இந்த இசை நிகழ்ச்சியை காண வேண்டுமென்ற விருப்பத்தையும் தெரிவித்திருந்தார்கள். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டுதான் இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பதாக ஃபாங்கி சங்கர் கூறினார்.

இளையராஜா 1000 எனும் இசை நிகழ்ச்சியில் தாய்க்குடம் பிரிச் இசை குழுவினர் இசைஞானியின் பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்ததோடு, அவரது சிறந்த பின்னணி இசைகளையும் வாசித்து அசத்தினார்கள். குறிப்பாக யூடியூப்பில் தாய்க்குடம் பிரிச் வெளியிடும் இளையராஜாவின் பாடல்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பல லட்சம் பார்வையாளர்களையும் இவர்களது பாடல் கவர்ந்துள்ளது. தமிழ்நாட்டிற்குப் பிறகு மலேசியாவில்தான் இவர்களுக்கு அதிகமாக ரசிகர்கள் உள்ளார் என்றார் அவர்.

குறிப்பாக இவர்களது புகழ்பெற்ற பாடல்கள் இந்த இசை நிகழ்ச்சியில் இடம்பெறும். அதேநேரத்தில் புதிய பாடல்களையும் இந்த இசை நிகழ்ச்சியில் பாடவிருக்கின்றார்கள். இவர்களது தொகுப்பில் அதிகமான தமிழ்ப் பாடல்கள் இடம்பெறும் அதே தருணத்தில் மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கில பாடல்களும் இதில் இடம்பெறும். இவர்களின் படைப்புக்காகவே 2 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஃபாங்கி சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த இசைக் குழுவைத் தவிர்த்து, இளைஞர்களின் இதயத்தில் இடம்பிடித்த உரசாதே பாடல் புகழ் விவேக் ஆகியோரும் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களின் பாடல்களை பாடவிருக்கின்றார்கள். குறிப்பாக இவர்கள் பாடிய உரசாதே பாடலை யூடியூப்பில் 3 கோடியே 20 லட்சம் பேர் பார்த்துள்ளார்கள். அதோடு பிரபுதேவா நடித்த குலேபகவாலி திரைப்படத்திற்கும் இவர்கள்தான் இசையமைப்பாளர்கள். மலேசிய திரைப்படமான வெடிகுண்டு பசங்க திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்கள்.

மலேசியாவை பொறுத்தவரையில் இவர்களுக்கு லட்சகணக்கான இளைஞர்கள் ரசிகர்களாக உள்ளார்கள். மிஸ்சிக்கலி, திக் டோக் போன்ற செயலிகளிலும் இவர்களது பாடல்களைப் பாடி விடீயோ செய்து தங்களது சமுக தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். இந்த இசை நிகழ்ச்சியில் இவர்களது படைப்புகள் நிச்சயம் கவன ஈர்க்குமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த இசை நிகழ்ச்சியில் மலேசியாவின் புகழ்பெற்ற இசை குழுவான தி பண்டிட்ஸ் மலேசிய கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள் இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சி டிசம்பர் 1ஆம் தேதி KWC ஸ்டார் எக்ஸ்போ ஃபேஸான் மாலின் நடைபெறுகின்றது. அனைவரும் இதில் கலந்து கொண்டு கொள்ள வேண்டுமென்பதற்காக குறைந்த விலையில் டிக்கெட்கள் விற்கப்படுகின்றன. மாணவர்களுக்கு சிறப்பு சலுகை உண்டு என ஃபாங்கி சங்கர் கூறினார். முன்னதாக இந்த இசை நிகழ்ச்சியை தம்மோடு இணைந்து ஏற்பாடு செய்யும் நிக் அமரன் மற்றும் மோகன் உட்பட ஆதவராளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேல் விவரங்களுக்கு https://www.facebook.com/imfconcerts/ என்ற முகநூல் பக்கத்தை வலம் வரலாம்.