பாரிஸ், அக்.10-

பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னாள் ஆட்டக்காரரும் அர்செனல் கால்பந்து கிளப்பின் சகாப்தமுமான தியேரி ஹென்றி, மொனாக்கோ கால்பந்து கிளப்பின் புதிய நிர்வாகியாக நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. மொனாக்கோவின் நடப்பு நிர்வாகி லியானார்டோ ஜார்டிம் விரைவில் தமது பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் லீக் போட்டியில் நடைபெற்ற 9 ஆட்டங்களுக்குப் பின்னர்,  மொனாக்கோ தற்போது 18 ஆவதுஇடத்தில் உள்ளது.  இந்த பருவத்தில் எந்த ஓர் ஆட்டத்திலும் மொனாக்கோ வெற்றி பெறவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை ரென்னேஸ் அணியிடம் மொனாக்கோ தோல்வி கண்டுள்ளது. இதனையடுத்து தொடர்ச்சியாக நான்கு ஆட்டங்களில் மொனாக்கோ தோல்வி கண்டுள்ளது.

1996-97 ஆம் பருவத்தில் மொனாக்கோ கிளப்புடன் பிரான்ஸ் லீக் பட்டத்தை வென்ற ஹென்ரி தற்போது பெல்ஜியம் கால்பந்து அணியில் ரோபேர்ட்டோ மார்டினேசின் துணை நிர்வாகியாக செயல்படுகிறார். இங்கிலாந்தில் ஆஸ்டன் வில்லாவும் ஹென்ரியை தனது நிர்வாகியாக நியமிக்க ஆலோசனைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மொனாக்கோவின் புதிய நிர்வாகியாக பொறுப்பேற்பது தொடர்பில் ஹென்ரிக்கும் அந்த கிளப்பின் நிர்வாகத்துக்கும் இடையில் பேச்சுகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் கால்பந்து அணியின் பயிற்றுனர் டீடியர் டிசாம்ப்பின் ஆலோசனைக்குப் பின்னர் ஹென்ரி அந்த பொறுப்பை ஏற்கக்கூடும் என கூறப்படுகிறது.