ஜோர்ஜ்டவூன், ஆக.11 – 

பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போவின் அலுவலகத்தில், எஸ்.பி.ஆர்.எம் எனப்படும்  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

அந்த அதிகாரிகள் புத்ராஜெயாவில் இருந்து வந்திருப்பதாக அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.எனினும் எந்த காரணத்துக்காக அந்த ஆட்சிக்குழு உறுப்பினரின் அலுவலகத்திற்கு வந்தனர் என்பதற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட அதிகாரி தெரிவிக்கவில்லை.

இதன் தொடர்பான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்திருந்தார். காலை 11 மணி முதல் ஊடகவியலாளர்கள், பீ பூன் போவின் அலுவலகம் முன் திரளத் தொடங்கினர். எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகள் அங்கிருந்து மதியம் 1 மணிக்கு வெளியேறினர்.

எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகள் தமது அலுவலகத்துக்கு வருகை புரிந்தது குறித்து பீ பூன் போ  ஊடங்கங்களிடம் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. சுங்கை பூயூ சட்டமன்ற உறுப்பினரான பீ பூன் போ மாநில சமூகநல, பரிவுடைய சமூகம்  மற்றும் சுற்றுசூழல் துறையின் ஆட்சிக் குழு உறுப்பினராக விளங்குகிறார்.