போர்ட்டிக்சன், அக். 12-

போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்களிப்பு சனிக்கிழமை நடைபெறுகிறது. மொத்தம் 68,317 வாக்காளர்கள் இந்த இடைத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். போர்ட்டிக்சன் மாவட்டத்திலுள்ள 32 வாக்களிப்பு மையங்களில் வாக்களிப்பு நடைபெறும் எனவும் 1,403 பணியாளர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் தேர்தல் ஆணைக் குழு துணைத் தலைவர் டான்ஸ்ரீ ஒஸ்மான் மாமுட் கூறினார்.

காலை 8.00 மணிக்கு தொடக்கும் வாக்களிப்பு மாலை 5.30 மணிக்கு நிறைவு பெறும். பிற்பகலில் மழை பெய்யும் என்பதால் வாக்காளர்கள் காலையிலேயே வாக்களிக்கச் செல்ல வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.

வாக்களிப்பு சீராக நடைபெறுவதற்கு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் முழு ஒத்துழைப்பு வழக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்த இடைத்தேர்தலில் 70 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

போர்ட்டிக்சன் நகராண்மைக்கழக மண்டபத்தில்  இரவு 10.00 மணிக்கு இடைத்தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் 7 முனை போட்டி நிலவுகிறது.

நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பாஸ் வேட்பாளராக பதவி ஓய்வு பெற்ற லெப்டினன் கார்னல் முகமது நசாரி மொக்தார் ஆகியோருடன் சுயேச்சை வேட்பாளர்களான டான்ஸ்ரீ முகமது இசா அப்துல் சாமாட், முகமது சைபுல் புஹாரி அஸ்லான், ஸ்டீப் சான் கேங் லியோங், கான் சி யுவேன், லவ் செக் யான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.