கோலாலம்பூர், ஆக. 11-

இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை வளர்க்க வேண்டிய ஒரே இடமாக பள்ளிக்கூடங்கள் விளங்குகின்றது. இந்நிலையில் அங்கேயும் பிரிவினைகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடாது என ம.இ.கா. இளைஞர் பிரிவித் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் எச்சரித்தார்.

 உலு லங்காட்டிலுள்ள பள்ளி ஒன்றில் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத மாணவர்களுக்கு நீர் அருந்துவதற்கு தனித்தனி கிளாஸ் வைக்கப்பட்டிருப்பது குறித்து, சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் சாடி வருகிறார்கள். இது குறித்து கருத்துரைத்த சிவராஜ் இவ்வாறு தெரிவித்தார்.

 குறிப்பாக இனவாதம், பிரிவினைகளை ஏற்படுத்தும் இடமாக பள்ளிகள் இருக்கக்கூடாது. அது மாணவர்கள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இது பின்னாளில் நாட்டில் நல்லிணக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துமென அவர் எச்சரித்தார்.

 ஒற்றுமையை வளர்க்கும் இடமாகத்தான் பள்ளிகள் இருக்க வேண்டும். இனம், சமயம் மொழி என அனைத்தையும் கடந்து இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை பள்ளிகளில் மட்டுமே காண முடிகின்றது. அந்த இடத்திலும் அவர்கள் வேற்றுமை படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் வன்மையாகச் சாடினார்.

 சிலாங்கூரில் உள்ள அந்த தொடக்கப்பள்ளி நீர் அருந்துவதற்கான கிளாஸில் இஸ்லாமிய மாணவர்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் என எழுதி ஒட்டப்பட்டிருந்தது. இது மற்ற பள்ளிகளிலும் தொடரப்படலாம். அப்படி தொடர்ந்தால், சில ஆண்டுகளுக்குப் பிறகு இனங்களுக்கிடையிலான பிரிவினை பல மடங்கு அதிகரிக்கும். அது நாட்டின் நல்லிணக்கத்திற்கு மிக பெரிய விளைவுகளை ஏற்படுத்துமென டத்தோ சிவராஜ் சந்திரன் வலியுறுத்தினார்.

 இந்த விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தை விசாரிக்க வேண்டும். பிரிவினையை ஏற்படுத்தும் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.  இந்த விவகாரத்தை மலேசியர்களாக சிந்திக்க வேண்டுமே தவிர இதனையும் அரசியல் ஆக்கக்கூடாது என சிவராஜ் தமது அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.