வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > டத்தோஸ்ரீ அன்வார் வரலாற்று வெற்றி! – பொன்.வேதமூர்த்தி வாழ்த்து
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

டத்தோஸ்ரீ அன்வார் வரலாற்று வெற்றி! – பொன்.வேதமூர்த்தி வாழ்த்து

கோலாலம்பூர், அக். 15-

மலேசிய அரசியல் வரலாற்றில் 60 விழுக்காடு வாக்குகள்கூட பதிவாகாத ஓர் இடைத் தேர்தலில் ஏறக்குறைய கால் இலட்ச வாக்குகள் பெரும்பான்மை-யில் வெற்றி பெற்று ஓர் இடைவெளிக்குப்பின் மீண்டும் நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைக்கும் மக்கள் நீதிக் கட்சியின் (பிகேஆர்) வலிமையான தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு ஹிண்ட்ராப் இயக்கத்தின் சார்பில் வாழ்த்து தெரிவிப்பதாக அதன் தலைவர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பிகேஆர் தலைவர் அனைத்து மக்களாலும் விரும்பப்படும் தலைவர் என்பது போர்ட்டிக்சனில் நடைபெற்ற இடைத்தேர்தல்வழி ஓங்கி முழங்கப்பட்டுள்ளது என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத் துறை அமைச்சருமான வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

துன் மகாதீர் தலைமையிலான அரசாங்கத்திற்கும் அவர் மேற்கொண்டுவரும் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கும் மக்கள் தெரிவித்துள்ள மகத்தான ஆதரவாகக் கருதப்படும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் பெருவெற்றி, டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஒருங்கிணைப்பில் நம்பிக்கைக் கூட்டணி அரசு இன்னும் செம்மையாக செயல்பட வழிவகுத்துள்ளது.

ஊழலற்ற புதிய மலேசியா உருவாகவும் வெளிப்படையான மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் சம வாய்ப்பளிக்கும் நிருவாகம் மலரவும் டத்தோஸ்ரீ அன்வார் தேசிய அரசியலில் மீண்டும் எழுச்சியுடன் செயல்படுவதற்கு ஏதுவாக அடைந்துள்ள இந்த இடைத்தேர்தல் வெற்றி ஏதுவாக அமையும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நம்பிக்கைக் கூட்டணியைச் சேர்ந்த புதிய-இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு டத்தோஸ்ரீ அன்வாரின் வருகை ஊக்கத்-தையும் உற்சாகத்தையும் அளிக்கும் அதேவேளை, நாடாளுமன்றத்தில் நம்பிக்கைக் கூட்டணியின் கட்டமைப்பையும் வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

மறு உருவாக்கம் செய்யப்பட்ட புதிய தொகுதியான போர்ட்டிக்சனில் இருந்து புதிதாக தேர்வு பெற்றுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், எதிர்கால மலேசியாவை செம்மையாக வழிநடத்தவும் நம்பிக்கைக் கூட்டணி அரசை மேலும் வலுப்படுத்தவும் ஹிண்ட்ராஃப் சார்பில் மீண்டும் வாழ்த்து தெரிவிப்பதாக பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன