வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > வெள்ளம் தீபாவளி விற்பனையை பாதித்து விடும் இந்தியா வர்த்தகர்கள் அச்சம்
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வெள்ளம் தீபாவளி விற்பனையை பாதித்து விடும் இந்தியா வர்த்தகர்கள் அச்சம்

கிள்ளான், அக்.15-

நகரத்தில் ஏற்படும் திடீர் வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காண அமலாக்கத் தரப்பினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று லிட்டல் இந்தியா தொழில்முனைவர்கள் சங்கத் தலைவர், என்.பி.இராமன் வலியுறுத்தினார்.

இதில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வெள்ளம் ஏற்பட்டதில் தங்களின் தீபாவளிக்கான விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டு விடும் என்று வணிகர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

இங்கு வெள்ள நீர் மட்டம் கால் முட்டி அளவு வரை இருப்பதோடு சில கடைகளிலும் தண்ணீர் புகுந்து விடுகிறது.
இப்போது மழை தொடர்ந்து பெய்வதால் இதுபோன்ற நேரத்தில் வெள்ளம் ஏற்படுவதற்கு அதிகப்படியான வாய்ப்பு காணப்படுகிறது. எனினும், இதே போல் மீண்டும் நிகழாது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு வெள்ளம் ஏற்படும் நேரத்தில் ஷாப்பிங் செய்வதற்கு வாடிக்கையாளர்கள் அச்சம் கொண்டிருக்கின்றனர் என பத்திரிகையாளர்களிடம் இராமன் குறிப்பிட்டார்.

இதனிடையே, கோத்தா ஆலாம் ஷா சட்டமன்ற உறுப்பினராக வீ.கணபதிராவ் இருந்த போது மேம்படுத்தப்பட்ட இந்த வடிகால் முறையில் இப்போதுதான் முதன்முறையாகத் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது என கேபிஎஸ் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர், கே.பி.சாமி தெரிவித்தார்.

இந்த நகரத்தின் ஒருசில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சியடைந்து விட்டோம். இதில் ஜாலான் ஸ்டேஷனில் இப்போதுதான் முதன்முறையாக வெள்ளம் ஏற்பட்டிருக்கும் வேளையில், ஜாலான் தெங்கு கிளானா உட்பட லிட்டல் இந்தியாவின் சில பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என பத்திரிகையாளர்களிடம் சாமி குறிப்பிட்டார்.

இதற்கிடையில், இந்த விவகாரத்தை கிள்ளான் நகராண்மைக் கழகம் (எம்பிகே), வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறை ஆகியவற்றுக்கு வணிகர்கள் கொண்டுச் செல்ல வேண்டும் என்று பண்டமாரான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், டோனி லியோங் டக் சீ வலியுறுத்தினார்.

இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடிவு எடுப்பதற்கு முன்பு அமலாக்கத் தரப்பினரின் கருத்துகளும் தேவைப்படுகிறது. அதிலும் இதில் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு இதற்கான முக்கியக் காரணத்தை முதலில் கண்டறிய வேண்டியது அவசியமாகும்.

இங்கு நான் சென்று பார்த்த வரை நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் இதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என பத்திரிகையாளர்களிடம் டோனி குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன