வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு விசா கட்டணம் வேண்டும்!
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு விசா கட்டணம் வேண்டும்!

கோலாலம்பூர், அக். 16-

சபரி மலைக்குச் செல்லும் மலேசிய பக்தர்களுக்கு சிறப்பு விசா கட்டணம் விதிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்நிறுத்தி மலேசியாவிற்கான இந்திய தூதரகத்தில் அதற்கான மகஜர் ஒன்றை மலேசிய ஐயப்ப சேவை சங்கம் வழங்கியுள்ளதாக அதன் தலைவர் யுவராஜா கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் சபரி மலைக்கு உலக நாடுகளிலிருந்து அதிகமான பக்தர்கள் பயணமாகின்றார்கள். கேரளாவிற்கு அடுத்து மலேசியாவிலிருந்து தான் அதிகமான ஐயப்ப பக்தர்கள் 41 நாள் விரதம் இருந்து ஐயப்பனுக்காக மாலை அணிவித்து இருமுடி கட்டி சபரி மலைக்கு செல்கிறார்கள். அதிகமானோர் மலேசியாவிலிருந்து சபரி மலைக்குச் செல்வதால் விசா கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தற்போது 460 வெள்ளியாக இருக்கும் விசா கட்டணம் பக்தர்களுக்கு மிகப்பெரிய சுமையை ஏற்படுத்துகின்றது. அதனால் விசா கட்டணம் முறையில் ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு சலுகை வழங்குவது குறித்து இந்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என யுவராஜா கூறினார். இதை அடிப்படையாக கொண்டுதான் மகஜரும், செவ்வாய்க்கிழமை காலை மலேசியாவுக்கான இந்திய தூதரகத்தில் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மகஜரில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் சபரி மலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு தலா 100 வெள்ளியை விசா கட்டணமாக விதிக்க வேண்டும். மேலும் 50 வயதிற்கு மேல்பட்டவர்கள் சபரி மலைக்குச் செல்லவிரும்பினால் அவர்களுக்கு விசா கட்டணம் விதிப்படக்கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தருணத்தில் சபரி மலைக்குச் செல்லும் ஒட்டுமொத்த மலேசியர்களுக்கான விசா கட்டணத்தையும் மறு ஆய்வு செய்யவேண்டும் என தாங்கள் வழங்கிய மகஜரில் குறிப்பிட்டுள்ளதாக மகஜரை இந்திய தூதரகத்தில் சமர்ப்பித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதனிடையே, சபரிமலைக்கு அனைத்து பெண்களும் செல்லலாம் என்று இந்தியாவின் உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது உலகளாவிய நிலையில் உள்ள ஐயப்ப சுவாமி பக்தர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காலம் காலமாக பின்பற்றி வரும் நடைமுறையை குறிப்பாக சுவாமி ஐயப்பனுக்காக கடைப்பிடிக்கும் ஐதீகத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்திருப்பதாக ஐயப்ப பக்தர்கள் கருதுகிறார்கள். இதில் மலேசியாவில் உள்ள ஐயப்ப பக்தர்களுக்கு உடன்பாடில்லை. இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்துமலை ஐயப்ப சுவாமி திருத்தலத்தின் முன் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் அமைதி பேரணியை நடத்தினர்.

இதை சுட்டிக்காட்டி உயர்நீதிமன்ற தீர்ப்பை மறுபரீசிலனை செய்யவேண்டும் என்றும் அதோடு ஒரு சில கோரிக்கைகளையும் மலேசிய ஐயப்ப சேவை சங்கம் மகஜரில் குறிப்பிட்டுள்ளதாக யுவராஜா கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன