பாரிஸ், அக்.17-

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான லீக் போட்டியில் 2018 உலகக் கிண்ண வெற்றியாளரான பிரான்ஸ் 2 – 1 என்ற கோல்களில் ஜெர்மனியை வீழ்த்தியது. ரஷ்யாவில் நடந்த உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்த ஜெர்மனி தற்போது ஐரோப்பிய லீக் போட்டியில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை நடந்த ஏ 1 பிரிவுக்கான ஆட்டத்தில் ஜெர்மனி 0 – 3 என்ற கோல்களில் நெதர்லாந்திடம் தோல்வி கண்டது. அந்த தோல்வியை அடுத்து பிரான்ஸ் அணிக்கு எதிராக ஜெர்மனி மீண்டும் எழுச்சிப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.எனினும் பிரான்சிடமும் தோல்வி கண்டு ஜெர்மனி தற்போது நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கிறது.

ஜெர்மனி இடம்பெற்றுள்ள ஏ1 பிரிவில் பிரான்ஸ் ஏழு புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. நெதர்லாந்து 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் ஜெர்மனி ஒரு புள்ளியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. பிரான்சுக்கு எதிரான ஆட்டத்தில் ஜெர்மனி பயிற்றுனர் யோக்கிம் லோவ் அதிகமான மாற்றங்களை செய்திருந்தார்.

முதல் பாதி ஆட்டத்தின் 14 ஆவது நிமிடத்தில் டோனி குரூஸ் போட்ட பினால்டி கோலின் மூலம் ஜெர்மனி முன்னணிக்கு சென்றது. எனினும் 62 ஆவது நிமிடத்தில் அந்தோய்ன் கிரியேஸ்மேன் போட்ட கோலின் வழி பிரான்ஸ் ஆட்டத்தை சமப்படுத்தியது. 80 ஆவது நிமிடத்தில் கிடைத்த பினால்டியின் வழி கிரியேஸ்மேன் , பிரான்சின் வெற்றி கோலைப் போட்டார்.