கோலாலம்பூர், அக். 17
குறைந்தபட்ச சம்பள விவகாரம் அடுத்த வாரம் அமைச்சரவை கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் முதலில் அமைச்சரவை கூட்டத்தில் இது பற்றி விவாதிக்க வேண்டும். இது அமைச்சரவைக்கு கொண்டு செல்லப்பட்டால் அனைத்து அமைச்சர்களும் இந்த விஷயத்தை புரிந்து கொள்ள முடியும். மேலும், இவ்விவகாரம் தீர்வு காணப்படுவதற்கான வழிமுறைகளையும் ஆராய முடியும் என குலசேகரன் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் சரியில்லாத காரணத்தாலும் அதிகமான கடன் தொகை காரணத்தினாலும் குறைந்தபட்ச சம்பளத்தை வெ.1,050 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் இதர அமைச்சர்களின் கருத்துக்களையும் மனிதவள அமைச்சு பெற வேண்டும் என அவர் சுட்டிக் காட்டினார்.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை நாடாளுமன்ற கட்டடத்தின் முன்புறம் அமைதி மறியலில் ஈடுபட்டனர். வெ.1,050 வெள்ளி குறைந்தபட்ச சம்பளத்தை அரசாங்கம் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.  அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இந்த அமைதி மறியலை எம்டியூசி எனப்படும் மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்தது. எம்டியூசி பேராளர் குழுவினருடன் சந்திப்பு நடத்திய பின் குலசேகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.