கோலாலம்பூர், அக். 19
மலேசிய ஹானா ஆதரவற்றோர் சமூக நல அமைப்பு தீபாவளியை முன்னிட்டு 2,000 வீடற்றவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையானது இம்மாதம் 27ஆம் தேதி 5 மாநிலங்களில் மாலை 5.00 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை நடைபெறும் என அதன் தலைவர் புவனேஸ்வரன் மோகன் கூறினார்.

ஜோகூர், பேரா, சிலாங்கூர், கூட்டரசு பிரதேசம், பினாங்கு என 5 மாநிலங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஹானா சமூகநல அமைப்பு தொடங்கப்பட்டு வீடற்றவர்களின் பிரச்னையை களைவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றோம். இதன் மூலம் மாதம் தோறும் 500 வீடற்றவர்களை சந்தித்து அவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி செய்து வருகின்றோம்.

வீடற்றவர்களில் 20 விழுக்காடு இந்திய சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு உதவி செய்வதோடு வீடற்ற பிரச்னையை எதிர்நோக்கும் அனைத்து சமூகத்தினருக்கும் ஹானா அமைப்பு தொடர்ந்து உதவிக் கரம் நீட்டி வருகின்றது. எங்களின் அமைப்பை பொருத்தவரை நாடற்றவர்கள் என்ற ஒரு குறிப்பிட்ட வட்டத்தினர் மலேசியாவில் இருக்கக்கூடாது. அந்த தொலைநோக்கு சிந்தனையை மனதில் நிலை நிறுத்தி நாங்கள் செயல்படுகின்றோம் என புவனேஸ்வரன் கூறினார்.

நாடற்றவர்கள் இருக்கிறார்களா என்ற கேள்வியும் எழுகின்றது. மலேசியாவை பொறுத்தவரை தலைநகர் கோலாலம்பூரில் மட்டும் 2500லிருந்து 3,000 வரை நாடற்றவர்கள் இருக்கின்றார்கள். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இவர்களில் பெரும்பாலானோர் போதைப்பித்தர்கள் இல்லை என்பதுதான். வீடற்றவர்களின் அடைப்படை பிரச்னைகளைக் களைய நாங்கள் முயற்சி செய்து வருகின்றோம். வேலை செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றோம்.

இந்த அமைப்பானது பல நல்ல உள்ளங்களின் ஆதரவின் பேரில் செயல்படுகின்றது. பணத்தைக் காட்டிலும் பலர் பொருளுதவியை செய்கின்றார்கள். இதைக் கொண்டு நாடற்றவர்களுக்கு எங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றோம். நாடு தழுவிய நிலையில் ஹானா அமைப்பிற்கு 100க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் உள்ளனர். இதனிடையே மருத்துவம் சார்ந்த தொண்டூழியர்கள் குறிப்பாக மருத்துவர்கள் இந்த அமைப்பிற்கு தேவைப்படுகின்றார்கள். சமூக சேவையில் ஈடுபடவேண்டும் என்ற சிந்தனையை கொண்ட மருத்துவர்கள் தங்களை அணுகலாம் என புவனேஸ்வர் கூறினார். மேல் விவரங்களுக்கு 014 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.