ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோ பீட்டர் வேலப்பன் காலமானார் !

0
7

கோலாலம்பூர், அக்.20 –

ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோ பீட்டர் வேலப்பன் இன்று காலை காலமானார்.  ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் நடப்பு தலைமைச் செயலாளர் டத்தோ வின்சோர் போல் ஜோன் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த அக்டோபர் முதல் தேதி 83 வயதை எட்டிய டத்தோ பீட்டர் வேலப்பனுக்கு டத்தின் பவளம் என்ற மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர். நெகிரி செம்பிலானின் சிலியாவில் பிறந்த பீட்டர் வேலப்பன் தொடக்கத்தில் ஆசிரியராக பணி புரிந்துள்ளார்.

பின்னர் 1978 ஆம் ஆண்டுத் தொடங்கி 2007 ஆம் ஆண்டு வரை ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றினார். இவர் காலக் கட்டத்தில் 2002 ஆம் ஆண்டில் தென் கொரியா, ஜப்பான் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியை இணைந்து ஏற்று நடத்துவதற்கு முக்கிய பங்காற்றினார்.

2002 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் ஏற்பாட்டுக் குழு இயக்குனராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் அவர் செயல்பட்டுள்ளார்.  பீட்டர் வேலப்பனின் மாரணம் ஆசிய கால்பந்து விளையாட்டுத்துறைக்கு மிகப் பெரிய இழப்பு என அச்சம்மேளனத்தின் தலைவர் ஷேக் சல்மான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தமது வாழ்நாள் முழுவதும் கால்பந்து விளையாட்டுக்கு அர்பணித்துக் கொண்ட ஓர் உன்னத மனிதர் என்றும் ஷேக் சல்மான் புகழாரம் சூட்டியுள்ளார். ஆசிய கால்பந்து சம்மேளனத்தில் மூன்று தலைவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் பீட்டர் வேலப்பன் தலைமைச் செயலாளராக பணியாற்றியுள்ளார்.1978 ஆம் ஆண்டுத் தொடங்கி 1994 ஆம் ஆண்டு வரை டான் ஶ்ரீ அபு ஹம்சா, 1994 ஆம் ஆண்டு தொடங்கி 2002 ஆம் ஆண்டு வரை சுல்தான் அஹ்மாட் ஷா பின்னர் முஹமட் ஹம்மாம் என மூவரின் தலைமைத்துவத்தில் அவர் பணி புரிந்துள்ளார்.