வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > 10 ஆண்டுகளுக்குப் பிறகு மைக்கியில் புதிய தலைமைத்துவம் ; டத்தோ கோபாலகிருஷ்ணன் அணி வென்றது !
முதன்மைச் செய்திகள்

10 ஆண்டுகளுக்குப் பிறகு மைக்கியில் புதிய தலைமைத்துவம் ; டத்தோ கோபாலகிருஷ்ணன் அணி வென்றது !

கோலாலம்பூர், அக்.20 –

மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தில் ( மைக்கி) 10 ஆண்டுகளுக்குப் பிறகு தலைமைத்துவ மாற்றம் ஏற்பட்டுள்ளது.  சனிக்கிழமை நடைபெற்ற அச்சம்மேளனத்தின் 2018 முதல் 2021 ஆம் தவணைக்கான தேர்தலில் நடப்பு தலைவர் டான் ஶ்ரீ கென்னத் ஈஸ்வரன் தோல்வி கண்டுள்ளார்.

கென்னத் ஈஸ்வரனை எதிர்த்து போட்டியிட்ட டத்தோ என். கோபாலகிருஷ்ணன் 111 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதேவேளையில் டான் ஶ்ரீ கென்னத் ஈஸ்வரன் 76 வாக்குகளை மட்டுமே பெற்றார். துணைத் தலைவருக்கான தேர்தலில் ராஜசேகரன் 105 வாக்குகளைப் பெற்ற வேளையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஷாம்  சுந்தர் 81 வாக்குகளை பெற்றார்.

இம்முறை நடைபெற்ற தேர்தலில் 188 பேராளர்கள் வாக்களித்துள்ளனர்.  மூன்று உதவித் தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் முறையே டத்தோ டாலிட் ( 117 வாக்குகள் ), டத்தோ எஸ். சுப்ரமணியம் ( 151 வாக்குகள் ), கே. கேசவன் ( 132 வாக்குகள் ) ஆகியோர்  வாகை சூடினர்.

மைக்கியின் தலைமைச் செயலாளர் பதவிக்கு டத்தோ ஏ.டி குமாரராஜா தேர்தெடுக்கப்பட்டுள்ளார். டத்தோ கோபாலகிருஷ்ணன் அணியில் இடம்பெற்றிருந்த குமாரராஜாவுக்கு 109 வாக்குகள் கிடைத்த வேளையில், டத்தோ கிருஷ்ணனுக்கு 75 வாக்குகள் கிடைத்தது. அதேவேளையில் பொருளாளர் பதவிக்கான தேர்தலில்  ஶ்ரீ காந்துக்கு 102 வாக்குகள் கிடைத்த வேளையில், டத்தோ எஸ். குமராசாமிக்கு 82 வாக்குகள் கிடைத்தது.

இதனிடையே, புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள டத்தோ என். கோபாலகிருஷ்ணன் , மைக்கியில் மாற்றங்களைக் கொண்டு வர புதிய தலைமைத்துவம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். மாற்றம் வேண்டி பேராளர்கள் வாக்களித்திருப்பதால் அதனை ஏற்று நிச்சயம் மைக்கியை ஒரு வலுவான வர்த்தக சம்மேளனமாக உருவாக்குவோம் என அவர் சூளுரைத்தார்.

மைக்கியின் தலைவர் பொறுப்புக்கான பதவிக்காலம் இரண்டு தவணைகளாக கட்டுப்படுத்தும் நோக்கில் அச்சம்மேளனத்தின் அமைப்பு விதிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். அதேவேளையில், அனைத்து இந்திய வர்த்தக சங்கங்களையும் அரவணைத்து செல்ல தயாராக இருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கடந்த கால தலைமைத்துவத்தில் சில வர்த்தக சங்கங்கள் மைக்கியில் இணையாமல் சுயமாக செயல்பட்டதை தாம் அறிந்துள்ளதாகவும் அவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வர தயாராக இருப்பதாகவும் கூறினார்.

இந்திய வர்த்தகர்களின் மேம்பாட்டுக்கு நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். குறிப்பாக இந்திய வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவர்களின்மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் மைக்கியின் தலைமைச் செயலாளர் டத்தோ ஏ.டி குமாராராஜா அண்மையில் தொழில்முனைவர் மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரெட்சுவானுடன் பேச்சுகள் நடத்தியிருப்பதையும் அவர் சுட்டி காட்டினார்.  நாடு முழுவதும் இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கும் அந்நிய தொழிலாளர்கள் பிரச்சினைத் தொடர்பிலும் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்துடன் பேச்சுகள் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே , மைக்கியின் தேர்தலில் பேராளர்களின் முடிவுக்கு கட்டுப்படுவதாக டான் ஶ்ரீ கென்னத் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் தாம் மைக்கியின் தலைவர் பொறுப்பை ஏற்கும் முன்னர் , வலுவான நிதி கையிருப்பை அச்சம்மேளனம் கொண்டிருக்கவில்லை.

மாறாக கடந்த 10 ஆண்டுகளில், மைக்கியின் நிதி வளத்தை ஐம்பத்தைந்து லட்சம் ரிங்கிட்டாக உயர்த்தியுள்ளதாக கென்னத் ஈஸ்வரன் கூறினார். மைக்கியில் அரசியலை நுழைக்காமல் புதிய தலைமைத்துவம்  தொடர்ந்து கட்டுக்கோப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார். அதேவேளையில் புதிய தலைமைத்துவத்துக்கு தேவையான ஆலோசனை வழங்கவும் தாம் தயாராக இருப்பதாக அவர் சொன்னார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன