மஇகா இனி கட்சி உறுப்பினர்களுக்காக மட்டுமே செயல்படும் -எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

0
14

கோலாலம்பூர், அக்.21-
மஇகா இனி கட்சி உறுப்பினர்களின் நலனுக்காக மட்டுமே பாடுபடும். இத்தருணத்தில் இந்திய சமுதாயத்தின் பிரச்னைகளை அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நான்கு அமைச்சர்கள் கவனிக்க வேண்டும் என மஇகாவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இந்தியர்களின் பிரச்னை என்றால் உடனே மஇகாவை கைகாட்டி விட்டு ஒளிந்து கொள்ளும் கலாசாரம் இனியும் இருக்கக்கூடாது.

இந்தியர்களின் பிரதிநிதியாக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நான்கு அமைச்சர்கள் அவர்களது பிரச்னைகளைக் களைய முனைப்புக் காட்ட வேண்டும். இனி வரும் 5 ஆண்டு காலத்தில் மஇகாவை எப்படி மேம்படுத்துவது, அதேநேரத்தில் கட்சி உறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எம்.மாதிரியான நடவடிக்கையை முன்னெடுக்க முடியும் என்பது குறித்து மட்டுமே நாங்கள் செயல்படுவோம் என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

மஇகா உயர்மட்டத் தலைவர் தேர்தல், மத்திய செயலவை மற்றும் மாநில பொறுப்புக்களில் வெற்றி பெற்றவர்களில் யார் 15ஆவது பொது தேர்தலுக்கான வேட்பாளர் என்பது இப்போது முடிவு செய்யப்படும். கடந்த காலங்களில் கட்சியின் தலைவர் வேட்பாளரை முடிவு செய்தார். ஆனால் எனது தலைமையில் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரின் ஆலோசனைப் படி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.

கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன், உதவித் தலைவர்கள் டத்தோ டி.மோகன், டத்தோ சிவராஜ் சந்திரன், டத்தோ முருகையா, 21 மத்திய செயலவை உறுப்பினர்கள், மாநில தலைவர்கள் என அனைவரிடமும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த கலந்துரையாடல்கள் கருத்து பரிமாற்றம் செய்யப்படும். இப்படி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் அவரின் வெற்றிக்காக பாடுபடுவார்கள் என அவர் குறிப்பிட்டார்.

27ஆம் தேதி கட்சியின் மாநாடு நடக்கின்றது. அந்த மாநாட்டில் மாநிலத் தலைவர்கள் யார் என்பது முடிவு செய்யப்படும். இனி செயல்படாத தலைவர்களுக்கு மத்திய செயலவையில் இடமில்லை. பணியாற்றக்கூடிய கட்சியை மேம்படுத்தக்கூடிய சிந்தனை கொண்டவர்கள் மட்டுமே தம்மோடு பயணிக்க முடியும் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

முன்னதாக மஇகா தேர்தல் வாக்கெடுப்பு நீண்டநேரம் நீடித்தது குறித்து கருத்துரைத்த அவர் 2013ஆம் ஆண்டு கட்சி தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு நடந்தது. அம்மாதிரியான ஒரு சம்பவம் இனியும் நடக்கக்கூடாது என்பதற்காக முறையான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார். மனநிறைவு கொள்ளாதவர்கள் நேரடியாக கட்சியின் தலைமைத்துவத்தை அணுகி தேர்தல் நடவடிக்கை அதிகாரி டான்ஸ்ரீ ராஜூவிடம் விளக்கம் பெறலாம்.

துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டான்ஸ்ரீ ராமசாமி கள்ள வாக்குகள் செலுத்தப்பட்டதாக புகார் மனு அளித்துள்ளார். ஆனால் அதில் எந்த தொகுதியென குறிப்பிடப்படவில்லை. மஇகா தேர்தல் நடைமுறையை பொறுத்தவரை கள்ள ஓட்டுக்கு வாய்ப்பு இல்லையென டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் விளக்கம் அளித்தார். 58 விழுக்காட்டு பேர் வாக்களித்தது மகிழ்ச்சி அளிக்கின்றது.

குறுகிய காலத்திற்குள் கிட்டத்தட்ட 15 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளார்கள். கட்சியின் நடைமுறை மாற்றம் நம்மை வலுப்படுத்தும் என்பதற்கு இது நல்ல உதாரணம். உருமாற்றத்தை நோக்கி நாம் பயணிக்கின்றோம். அந்த பயணம் கடுமையானதாக இருக்கும். அதில் நம்மோடு இணைந்து கட்சி உறுப்பினர்களும் பயணமாக தயாராக வேண்டும் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.