முகப்பு > அரசியல் > சிருல் அசாரைக் கொண்டு வர மரணத் தண்டனையை அகற்றப்பட்டதா?? என்.சுரேந்திரன் காட்டம்!
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

சிருல் அசாரைக் கொண்டு வர மரணத் தண்டனையை அகற்றப்பட்டதா?? என்.சுரேந்திரன் காட்டம்!

பெட்டாலிங் ஜெயா, அக்.22-

சிருல் அசாரை மலேசியாவுக்குக் கொண்டு வருவதற்கு மரணத் தண்டனையை அகற்ற அரசு எண்ணம் கொண்டுள்ளதாக மசீச துணைத் தலைவர், டத்தோஸ்ரீ வீ கா சியோங் வெளியிட்டுள்ள அறிக்கை அபத்தமானது என்று ‘லாயர் போர் லிபர்டி கழகத்தின் ஆலோசகர், என்.சுரேந்திரன் கூறினார்.

மரண தண்டனையை அகற்றும்படி சிவில் சமூகத்தினர் உட்பட அனைத்துலக அமைப்புகளும் கோரிக்கை விடுத்து நீண்ட நாட்களாகி விட்டது. அதன்படி மரண தண்டனையை அகற்றும் பக்காத்தான் அரசின் நடவடிக்கையானது மலேசியாவில் பல்லாண்டு காலமாக அகற்ற கோரிக்கை வைத்த மக்களுக்கான உச்சக்கட்ட நடவடிக்கையாகும்.

அதனால் அல்தான்துயா கொலை வழக்குத் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிருல் உமார் அஸாரை ஆஸ்திரேலியாவிலிருந்து வரவழைத்து தண்டனை விதிப்பது ஓர் அவசரமான முடிவாகும் என்று வீ கூறியிருப்பது அபத்தமானது என்று சுரேந்திரன் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

முன்னதாக மரண தண்டனையை அவசர அவசரமாக அகற்றுவதற்கு முன்பு குறைந்தபட்சம் அந்தப் பரிந்துரையை ஆய்வு செய்ய நாடாளுமன்றத் தேர்வுச் சிறப்புக் குழுவை (பிஎஸ்சி) அரசு அனுமதிக்க வேண்டியது அவசியமாகும் என்று வீ நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

இதனிடையே, மரண தண்டனையை பிஎஸ்சி முன்கூட்டியே ஆய்வு செய்ய வேண்டும் என்று வீ கூறியதை சுரேந்திரன் கடுமையாகச் சாடினார்.

இதில் பிஎஸ்சியை உண்மையில் தேமு. அரசு அவசர அவசரமாக போலி செய்திகள் எதிர்ப்புச் சட்டத்தை அங்கீகரிக்கும் போது வீ அல்லது மசீச எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை, மாறாக அவர்கள் அமைதியாகவே இருந்து அம்னோவின் உத்தரவிற்கேற்பத்தான் நடந்து கொண்டார்கள். ஆனால் இப்போது மனித உரிமைக்கேற்ப மரண தண்டனை அகற்ற பக்காத்தான் இலக்குக் கொண்டிருக்கும் நேரத்தில் பிஎஸ்சியைக் கோரி மசீச தடுக்கிறது.

அப்படி இந்நாட்டில் மரண தண்டனைத் தொடர்ந்து நிலைப்படுத்தப்பட்டால் பல உயிர்கள் இதனால் பலியாகும். இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருசிலர் குற்றம் புரியாதவர்களாக இருக்கலாம் அல்லது தவறுதலாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கலாம்; இன்னும் சிலர் போதைப்பொருள் கடத்தல்காரர்களாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இவர்களில் பெரும்பாலானோரை இதன் வழி சரிப்படுத்த முடியும்.

இதில் தே.மு மற்றும் மசீச கூறுவதைப் பார்க்கும் போது அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதுதான் இவ்விவகாரத்திற்கு முழுமையானத் தீர்வு என்று கருதப்படுவதாக சுரேந்திரன் மேலும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன