வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > ஓல்ட் டிரப்போர்ட்டில் மீண்டும் ரொனால்டோ; மிகப் பெரிய எதிர்பார்ப்பில் மென்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் !
விளையாட்டு

ஓல்ட் டிரப்போர்ட்டில் மீண்டும் ரொனால்டோ; மிகப் பெரிய எதிர்பார்ப்பில் மென்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் !

மென்செஸ்டர் , அக்.23-

இன்று பின்னிரவு நடைபெறவிருக்கும் ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் எச் பிரிவுக்கான ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட்,  இத்தாலியின் யுவன்டஸ் அணியை எதிர்கொள்ள விருக்கிறது. இந்த ஆட்டத்தில் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, யுவன்டஸ் அணியில் களமிறங்க விருக்கிறார்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஓல்ட் டிரப்போர்ட் அரங்கில் மீண்டும் தமது பழைய அணியான மென்செஸ்டர் யுனைடெட்டை எதிர்கொள்ளவிருக்கிறார். 2003 ஆம் ஆண்டு தொடங்கி 2009 ஆம் ஆண்டு வரை மென்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் விளையாடிய ரொனால்டோ, 292  ஆட்டங்களில் 118 கோல்களைப் போட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டில் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் கிளப்பில் இணைந்த ரொனால்டோ, 4 ஆண்டுகளுக்குப் பின்னர் 2013 ஆம் ஆண்டில் ஓல்ட் டிரப்போர்ட் அரங்கில் கால் பதித்தார். அப்போது ஜோசே மொரின்ஹோவை நிர்வாகியாகக் கொண்டிருந்த ரியல் மாட்ரிட் 2 – 1 என்ற கோல்களில் வென்றது. அந்த ஆட்டத்தில்  கோல் அடித்தபோது கூட ரொனால்டோ அதனைக் கொண்டாடவில்லை.

அதன் பின்னர் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரியல் மாட்ரிட் அணியுடன் நான்கு முறை சாம்பியன்ஸ் லீக் கிண்ணங்களை வென்ற ரொனால்டோ, தற்போது இத்தாலியின் யுவன்டஸ் அணியில் விளையாடுகிறார். யுவன்டஸ் அணியுடன் ரொனால்டோ களமிறங்கவிருக்கும் ஆட்டம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரொனால்டோ, தமது முன்னாள் அணியான மென்செஸ்டர் யுனைடெட்டுக்கு மிகப் பெரிய மிரட்டலாக இருப்பார் என கணிக்கப்படுகிறது. மென்செஸ்டர் யுனைடெட் அணியும் கடந்த சில ஆட்டங்களில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், இன்றைய ஆட்டத்தில் ரொனால்டோவின் ஆட்டம் கவனிக்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன