சென்னை, அக்.23- 

அரசியல் கட்சி அறிவிப்பை டிசம்பரில் ரஜினிகாந்த் அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் திங்கள்கிழமை திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இது ரஜினி ரசிகர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

படப் பிடிப்புக்காக வட மாநிலம் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், கடந்த சனிக்கிழமை சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையம் வந்த அவரிடம், வரும் டிசம்பர் 12- ஆம் தேதி அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அறிவிக்கப்படுமா எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மறுப்பு தெரிவித்த ரஜினிகாந்த், தனது பிறந்த நாளன்று கட்சி தொடங்க உள்ளதாக வெளியான தகவல் தவறானது.

இருந்தபோதும் கட்சி தொடங்குவதற்கான 90 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. மக்களவைத் தேர்தல் அறிவித்த பிறகு எங்களுடைய நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும் என்றார். ஆனால், ரஜினிகாந்தின் இந்த பேட்டிக்குப் பின்னர், நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவருடைய சகோதரர் சத்யநாராயண ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியல் கட்சி தொடங்குவது குறித்து டிசம்பரில் ரஜினி அறிவிப்பார் என்று கூறினார்.

இந்த நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினி மக்கள் மன்றத் தலைமை அலுவலகத்தில் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் திங்கள்கிழமை திடீர் ஆலோசனை மேற்கொண்டார். நீண்ட நாள்களுக்குப் பிறகு மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொண்டிருப்பது, அவருடைய ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இருந்தபோதும், மன்ற செயல்பாடுகள் குறித்த பொதுவான விஷயங்களே இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாக கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.