முகப்பு > சமூகம் > அந்நியத் தொழிலாளர்கள் பிரச்னைகள்  விரைவில் தீர்வு காணப்படும் -டத்தோ கோபாலகிருஷ்ணன்
சமூகம்முதன்மைச் செய்திகள்

அந்நியத் தொழிலாளர்கள் பிரச்னைகள்  விரைவில் தீர்வு காணப்படும் -டத்தோ கோபாலகிருஷ்ணன்

கோலாலம்பூர், அக்.24

இந்திய வர்த்தகர்களுக்கு இருந்து வரும் அந்நியத் தொழிலாளர்கள் பிரச்னை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மைக்கியின் இந்தப் புதிய தலைமைத்துவத்தில் பல மாற்றங்கள் நிகழும் என்றும் அதிலும் குறிப்பாக இந்திய வர்த்தகர்கள் தொடர்ந்து சந்தித்து வரும் அந்நியத் தொழிலாளர்கள் பிரச்னையில் கவனம் செலுத்தவிருப்பதாக அவர் சொன்னார்.

மைக்கி பொறுப்பாளர்களுடன் இணைந்து பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டை சந்திக்க விருப்பதாகவும் இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சிடம் மனுவை ஒப்படைக்கவிருப்பதாகவும் இன்று மைக்கி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளார்கள் சந்திப்பில் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

அதே வேளையில், இந்திய சமுதாயத்தை பிரதிநிதித்து இருக்கும் 4 அமைச்சர்களையும் சந்தித்து இந்திய சமுதாயத்தில் இருக்கக்கூடிய பிரச்னைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்த விருப்பதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, அரசு சார்பு நிறுவனங்களில் மைக்கியில் இருக்கும் வர்த்தக பிரதிநிதிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் இந்திய வர்த்தகர்களுக்கு நல்ல வாய்ப்புகள் ஏற்படுத்தி தர முடியும் என்றார் அவர்.

தற்போது அந்நிய நாட்டவர்களும் இங்கு சொந்தமாக வியாபாரம் செய்து வருகின்றனர். இது உள்ளூர் வர்த்தகர்களுக்கு சவாலாக இருப்பதாகவும் இதனை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன