வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > “தினகரனோடு ஒட்டிக் கொள்ளப் பார்க்கிறார் திவாகரன்!” – கோட்டையில் கொதித்த எடப்பாடி பழனிசாமி
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

“தினகரனோடு ஒட்டிக் கொள்ளப் பார்க்கிறார் திவாகரன்!” – கோட்டையில் கொதித்த எடப்பாடி பழனிசாமி

தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பை அடுத்து மதுரையில் தீவிர ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார் தினகரன். `திவாகரனைப் போல பலரை நான் பார்த்து வந்திருக்கிறேன். இந்தத் தீர்ப்பால் அ.தி.மு.கவுக்கு இழப்பு எனக் கூறிக் கொண்டே தினகரன் பக்கம் தூது விட்டுக் கொண்டிருக்கிறார்’ எனக் கட்சி நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று வெளியான தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கின் தீர்ப்பு, சசிகலா வட்டாரத்துக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. `சபாநாயகர் உத்தரவு செல்லும்’ என்ற தீர்ப்பை எதிர்த்து, `தினகரன் தரப்பினர் மேல்முறையீடு செல்லலாம்’ என்பதை அறிந்து, உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவைத் தாக்கல் செய்திருக்கிறது சபாநாயகர் தனபால் தரப்பு. நீதிமன்றத்தின் உத்தரவால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது அ.தி.மு.க. இந்த நிலையில், மன்னார்குடியில் நேற்று திவாகரன் அளித்த பேட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. தீர்ப்பையொட்டி, நேற்று மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், `18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செல்லும் என்ற தீர்ப்பு முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலேயே வந்திருக்கிறது.

சபாநாயகரின் செயல்பாட்டில் நீதிமன்றம் தலையிடாது என்பது உண்மை என்றாலும் சபாநாயகர் அளித்த தீர்ப்பு பாரபட்சமானது. ஆட்சிக்கு எதிராக வாக்களித்தும் பன்னீர்செல்வம் அணியின் எம்.எல்.ஏக்கள், பணியில் தொடர்கிறார்கள். ஆனால், முதல்வர் மீது நம்பிக்கையில்லை எனக் கூறி மனு கொடுத்ததால், 18 எம்.எல்.ஏ.க்களும் நீக்கப்பட்டது பாரபட்சமான தீர்ப்பு என்பது என்னுடைய கருத்தாகும். இதைப் பேசித் தீர்வு கண்டிருந்தால் ஜெயலலிதாவின் உழைப்பால் வெற்றி பெற்ற 18 தொகுதிகளை அ.தி.மு.க இழந்திருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. இந்தத் தீர்ப்பால் இழப்பு அ.தி.மு.க.வுக்குத்தான். `18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் செல்லும்’ என்ற நீதிமன்ற தீர்ப்பு அ.தி.மு.க. அரசுக்கு ஊதப்பட்ட சங்கு. மீண்டும் தேர்தல் வந்தாலும் இழந்த தொகுதிகளில் வெற்றி பெறுவது கடினம்’ எனக் கூறியிருந்தார்.

 

இதுநாள் வரையில் ஆளும்கட்சிக்கு ஆதரவு கொடுத்து வந்த திவாகரன், அ.தி.மு.க அரசை விமர்சித்துப் பேட்டியளித்தது ஆளும்கட்சி வட்டாரத்தை கவனிக்க வைத்தது. இதுதொடர்பாக நேற்று ஆதரவாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “நீதிமன்றத் தீர்ப்பு இப்படி வரும் என திவாகரன் எதிர்பார்த்திருக்க மாட்டார். சபாநாயகர் உத்தரவு செல்லாது எனத் தீர்ப்பு வந்தால், தன் சார்பாக ஏழு எம்.எல்.ஏக்களை அழைத்து வரலாம் எனத் திட்டமிட்டிருந்தார். தீர்ப்பு நமக்கு சாதகமாக வந்துவிட்டதால், அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே, தஞ்சை தொகுதிக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்குள் தினகரனோடு போய்ச் சேர்ந்துவிடலாம் எனக் கணக்கு போடுகிறார். இவரைப் போல் பலபேரை நான் பார்த்து வந்திருக்கிறேன். அரசியல் களத்துக்குள் எனக்கும் ஸ்டாலினுக்கும்தான் போட்டி.

2016 சட்டமன்றத் தேர்தல் முடிவில் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் ஜெயலலிதா வெற்றி பெற்றார். அதுவும் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் கிடைத்த வாக்குகள்தான். தற்போது உளவுத்துறை அளித்துள்ள அறிக்கையின்படி பார்த்தால், பல தொகுதிகளில் டெபாசிட் இழக்கக்கூடிய சூழலில்தான் தி.மு.க இருக்கிறது. ஸ்டாலின், மீண்டும் அதிகாரத்துக்குள் வரப்போவது போலவும் புலிக்குப் பயந்தவர்கள் எல்லாம் என் முதுகில் வந்து படுத்துக் கொள்ளுங்கள் என்பது போலவும் சிலர் பேசி வருகின்றனர். வேறு சிலர் அ.தி.மு.க பலவீனப்பட்டுவிட்டது போலப் பேசுகிறார்கள். அதிகாரத்தை இழந்துவிட்டவர்களின் பேச்சு அது” எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமியின் பேச்சு குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், “ஆளும்கட்சிக்கு ஆதரவு மனநிலையில் திவாகரன் இருந்தாலும், அவருக்கு எந்தவித முக்கியத்துவத்தையும் முதல்வர் தரவில்லை. தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வந்திருந்தால், திவாகரனின் உதவி தேவைப்பட்டிருக்கலாம். அதனால்தான், எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார் முதல்வர். இப்போது இந்த அரசுக்குத் திவாகரன் தேவையில்லை. நேற்று மன்னார்குடியில் அவர் அளித்த பேட்டியைப் பார்த்த பிறகுதான் கொதித்துப் போய் பேசினார் முதல்வர்” என்றார் விரிவாக.

 

நன்றி : ஆனந்த விகடன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன