வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > எதிர்காலத்தை இப்போதே முடிவு செய்யுங்கள்!-டத்தோஸ்ரீ ஜெயந்திரன்
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

எதிர்காலத்தை இப்போதே முடிவு செய்யுங்கள்!-டத்தோஸ்ரீ ஜெயந்திரன்

கோலாலம்பூர், அக். 26-
இந்திய விளையாட்டாளர்கள் எப்போதும் தவறான பாதையை தேர்ந்தெடுக்கக்கூடாது. உங்களின் எதிர்காலம் உங்கள் கையில்தான் உள்ளது. அதனால் அவசரமில்லாமல் சிந்தித்து செயல்படுங்கள் என தொழிலதிபரும் சமூக சேவையாளருமான டத்தோஸ்ரீ ஜெயந்திரன் வலியுறுத்தினார்.

வியாழக்கிழமை இரவு மிஃபாவின் அனைத்து விளையாட்டாளர்களுக்கும் தலா 1000 வெள்ளியை தீபாவளி அன்பளிப்பாக வழங்கிய நிகழ்ச்சியில் பேசிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கால்பந்து விளையாட்டாளராகும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்து விடாது. அந்த வாய்ப்பை எப்படி முறையாக பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் மேம்படுவது என்பது குறித்துதான் நீங்கள் ஆலோசிக்க வேண்டும். விளையாட்டுத் துறையில் பல சவால்களை கடந்து வர வேண்டியது விளையாட்டாளர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சவாலாகும்.

அந்த சவாலை தாண்டி விட்டால், வாழ்க்கையில் மிகப் பெரிய சாதனையை உங்களால் நிகழ்த்த முடியுமென டத்தோஸ்ரீ ஜெயந்திரன் குறிப்பிட்டார். தீபத் திருநாள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் உன்னத நாள். இந்த நாளில் மிஃபா விளையாட்டாளர்களும் தங்கள் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்பதற்காக தாம் இந்த அன்பளிப்பு தொகையை வழங்குவதாகவும் அவர் கூறினார்.

மிஃபா விளையாட்டாளர்களின் சம்பளப் பிரச்னை நிச்சயமான தீர்க்கப்படுமென அதன் நிர்வாகி துவான் ராஜன் கூறினார். வாக்குறுதி வழங்கியபடியே சம்பளம் வழங்கப்படுமென அவர் உறுதியளித்தார். மிஃபா விளையாட்டாளர்களின் சம்பள பிரச்னைகளை களைவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்போது இறுதி கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றது. இன்னும் சில வாரங்களில் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அடுத்த பருவத்தில் மிஃபா எந்த அடையாளத்தோடு பிரிமியர் லீக் போட்டியில் விளையாடவிருக்கின்றது என்பது குறித்தும் இப்போது பேசப்பட்டு வருகின்றது. ஆனால் ஆட்டக்காரர்கள் தேர்வு முழுமையுமான பயிற்றுநர் தேவன் கையில்தான் உள்ளது. அதில் நிர்வாகம் ஒருபோதும் தலையிடாது என துவான் ராஜன் கூறினார்.

இதனிடையே மிஃபா அணியின் வளர்ச்சி பிரமிக்கும் வகையில் உள்ளதாக பயிற்றுநர் தேவன் கூறினார். மிஃபா மலேசியா எம்ஏஎம் கிண்ணப் போட்டியில் தமது பயணத்தை தொடங்கி அண்மையில் நடந்த மலேசிய கிண்ணப் போட்டிவரை எவ்வாறு மேம்பாடு கண்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

நமது அடைவுநிலை முன்னணி கால்பந்து அணிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வரும் காலங்களில் அதே வேகத்தோடு பயணித்தால் நம்மால் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்ய முடியுமென தேவன் தெரிவித்தார்.

கால்பந்து அணிகளில் சம்பளப் பிரச்னை எழுவது இயல்பான ஒன்றுதான். அதை ஒருபுறம் வைத்துவிட்டு மிஃபா அணியின் வெற்றிக்கு எப்படி நம்மால் துணை நிற்க முடியுமென்பது குறித்துதான் யோசிக்க வேண்டுமென மிஃபா அணியின் கேப்டன் சுப்ரமணியம் தெரிவித்தார்.

இதற்கு முன்னாள் தாம் விளையாடிய முன்னணி கால்பந்து அணிகளிலும் சம்பளப் பிரச்னை இருந்தது. இது தற்காலிகம்தான். அதனால் அடுத்த இலக்கை நோக்கி பயணிப்போம் என சுப்ரா வலியுறுத்தினார். இதனிடையே மிஃபா விளையாட்டாளர்களுக்கு ஆதரவு அளித்த டத்தோஸ்ரீ ஜெயந்திரனுக்கு, துவான் ராஜன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன