வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > பேட்மிண்டன் விளையாட்டில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அடைவுநிலை பிரமிக்க வைக்கின்றது!
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

பேட்மிண்டன் விளையாட்டில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அடைவுநிலை பிரமிக்க வைக்கின்றது!

கோலாலம்பூர், அக் 28-
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமல்ல விளையாட்டுப் போட்டிகளிலும் மற்ற இனப் பள்ளி மாணவர்களைப் போல மேம்பாடு கண்டு வருகின்றனர். இந்த வளர்ச்சியை கண்கூடாகப் பார்க்க முடிகின்றது என ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இணை இயக்குநர் சுரேன் கந்தா கூறினார்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் 3ஆம் ஆண்டாக ஏற்பாடு செய்த தமிழ்ப்பள்ளிகளுகிடையிலான போட்டியின் இறுதிச் சுற்று கோலாலம்பூர் ஸ்போர்ட்ஸ் அரேனாவில் நடந்தது. இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் பேரா அரசினர் தமிழ்ப்பள்ளியை கெடாவின் சரஸ்வதி தமிழ்ப்பள்ளி வீழ்த்தி வெற்றியாளர் பட்டத்தை தட்டிச் சென்றது. இதன் நிறைவு விழாவில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தோற்றுநர் டான்ஸ்ரீ தம்பிராஜா சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்டார்.

இப்போட்டியை 3ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியபோது தமிழ்ப்பள்ளிகளில் பேட்மிண்டன் விளையாடுவதற்கு மாணவர்கள் கிடைப்பார்களா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இப்போது அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் பேட்மிண்டன் போட்டியை நடத்துமென்பதை அறிந்த தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம், நிர்வாகிகள் என அனைவரும் தங்களின் பிள்ளைகளுக்கு பேட்மிண்டன் பயிற்சியை வழங்குகின்றார்கள் என சுரேன் கந்தா கூறினார்.

இவ்வாண்டு கலந்து கொண்ட பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகள் தங்களின் பள்ளிகளில் பெயர்களை கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடுவார்கள். அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்றுநர்களும் இதில் கலந்து கொண்டார்கள். அவ்வப்போது மாணவர்களுக்கு இவர்கள் வழங்கும் ஊக்கமானது மாணவர்களுக்கு மிகப் பெரிய உந்துகோலாக அமைந்தது என்றார் அவர்.

இந்நிலை தொடரும் பட்சத்தில் அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் தலமாக மாறும். இதனால் மலேசியாவின் சிறந்த பேட்மிண்டன் வீரரை தமிழ்ப்பள்ளியிலிருந்து நம்மால் உருவாக்க முடியுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார். நாட்டின் பேட்மிண்டன் சகாப்தமான டத்தோ லீ சோங் வேய் உடல்நலக் குறைவாக இருப்பதால், அவரது முகம் பதிக்கப்பட்ட பதாகையில் நலம்பெற மாணவர்கள் வாசகங்களை எழுதினார்கள்.

அதில் ஜோகூரைச் சேர்ந்த ஒரு மாணவன் உங்கள் இடத்தை நான் நிரப்புவேன் என எழுதினான். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதுதான் நமது மாணவர் சமுதாயத்தின் எழுச்சி. இது நிச்சயம் சிறந்த பேட்மிண்டன் விளையாட்டாளரை உருவாக்குமென சுரேன் கந்தா நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக ஜோகூர் மாநிலத்தை பிரதிநிதித்து மாசாய் தமிழ்ப்பள்ளியும், தாமான் துன் அமீனா தமிழ்ப்பள்ளியும் களம் இறங்குகின்றன. மலாக்கா மாநிலத்தைப் பிரதிநிதித்து மலாக்கா குபு தமிழ்ப்பள்ளியும் புக்கிட் காஜாங் தமிழ்ப்பள்ளியும், இறுதிப் போட்டியில் களம் இறங்கும் வேளையில் நெகிரி செம்பிலான் மாநிலத்தை பிரதிநிதித்து கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியும், நீலாய் தமிழ்ப்பள்ளியும் தகுதி பெற்றுள்ளன. தலைநகரைப் பொறுத்தவரை செராஸ் தமிழ்ப்பள்ளியும், செந்தூல் தமிழ்ப்பள்ளியும், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள வேளையில் சிலாங்கூரில் நடப்பு வெற்றியாளரான காஜாங் தமிழ்ப்பள்ளியும், பூச்சோங் தமிழ்ப்பள்ளியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.

கெடா மாநிலத்தில் சரஸ்வதி தமிழ்ப்பள்ளி, மஹா ஜோதி தமிழ்ப்பள்ளி, பினாங்கு மாநிலத்தில் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி, பெராய் தமிழ்ப்பள்ளி, பேராக்கில் அரசினர் தமிழ்ப்பள்ளி, திரேசா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளி, பகாங்கில் பெந்தோங் தமிழ்ப்பள்ளி, கோல லீப்பிஸ் தமிழ்ப்பள்ளி ஆகியவை இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்துள்ளன.

இதில் கெடா சரஸ்வதி தமிழ்ப்பள்ளியும் பேரா அரசினர் தமிழ்ப்பள்ளியும் இறுதி போட்டியில் மோதின. முதல் ஆண்களுக்கான தனிநபர் பிரிவில் சரஸ்வதி தமிழ்ப்பள்ளி மாணவர் 21-4, 21-6 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றார். பின்னர் களமிறங்கிய பெண் தனிநபர் பிரிவில் சரஸ்வதி தமிழ்ப்பள்ளியை 6-21, 7-21 என்ற புள்ளிகளில் அரசினர் தமிழ்ப்பள்ளி வென்றது. வெற்றியை நிர்ணயிக்கும் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் 21-17, 21-11 என்ற புள்ளிகளில் சரஸ்வதி தமிழ்ப்பள்ளி வெற்றி பெற்று 5000 வெள்ளி ரொக்கத்தையும் சுழல் கிண்ணத்தையும் வென்றது.

2ஆம் நிலை வெற்றியாளரான பேரா அரசினர் தமிழ்ப்பள்ளிக்கு 3,000 வெள்ளி ரொக்கமும் பதக்கமும் வழங்கப்பட்டது. 3ஆம் நிலை வெற்றியாளரான ஜோகூர் தாமான் துன் அமினா தமிழ்ப்பள்ளிக்கு 1,500 வெள்ளியும் பதக்கமும் 4ஆம் நிலை வெற்றியாளரான பினாங்கு பெராய் தமிழ்ப்பள்ளிக்கு 500 வெள்ளியும், பதக்கமும் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன