அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > செல்பி எடுத்த இளைஞரின் போனை தட்டிவிட்டது ஏன்?.. சிவக்குமார் விளக்கம்!
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

செல்பி எடுத்த இளைஞரின் போனை தட்டிவிட்டது ஏன்?.. சிவக்குமார் விளக்கம்!

சென்னை:

தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது எதனால் என்று நடிகர் சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சிவக்குமார் தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் போனை கோபமாக தள்ளிவிட்டது பெரிய வைரலாகி உள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டுப்பட்டு இருக்கும் தனியார் கருத்தரிப்பு மையம் ஒன்றை திறக்க நடிகர் சிவக்குமார் இன்று சென்றார்

இந்த நிலையில், சிவக்குமார் அங்கு வந்த போது அங்கு நின்ற இளைஞர் ஒருவர் அவருடன் செல்பி எடுக்க முயன்றார். சிவக்குமார் வருவதை பார்த்துவிட்டு செல்போன் கேமராவை தூக்கி செல்பி எடுக்க முயன்றார். இதை பார்த்து கோபப்பட்ட சிவக்குமார், அந்த இளைஞரின் போனை கோபமாக தள்ளிவிட்டார்.

இது வீடியோவாக பதிவாகி உள்ளது. இந்த வீடியோ இணையம் முழுக்க வெளியாகி வைரலாகி உள்ளது. இதை வைத்து நெட்டிசன்கள் இணையம் முழுக்க மீம் போட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது எதனால் என்று நடிகர் சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், செல்பி எடுப்பது என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வெளியே சென்றால் செல்பி எடுக்கலாம். கொடைக்கானல், ஊட்டி, தொட்டபெட்டா போல சுற்றுலாதளங்களுக்கு சென்றால் செல்பி எடுக்கலாம். அங்கு எப்படி வேண்டுமானாலும் போட்டோ எடுக்கலாம். அதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் பொது இடத்தில் பலர் இருக்கும் போது செல்பி எடுப்பது தவறு.

பொது இடத்தில் மொத்தம் 300 பேர் இருக்கும் இடத்தில் செல்பி எடுப்பது தவறு. நான் காரில் இருந்து இறங்கி விழா மண்டபத்திற்கு செல்வதற்கு முன் என்னுடைய பாதுகாவலர்களை எல்லாம் தள்ளிவிட்டுவிட்டு வரிசையாக பலர் வந்து செல்பி எடுத்து எனக்கு இடையூறு செய்வது சரியா? என்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா? விஐபி என்றால் இப்படி புகைப்படம் எடுப்பதில் நியாயம் இருக்கிறதா? நான் எத்தனை பேருடன் எத்தனை விழாக்களில், எத்தனை பொது இடங்களில் புகைப்படம் எடுத்து இருக்கிறேன் தெரியுமா?

நான் ஒன்றும் புத்தன் கிடையாது. எல்லோரையும் போல நானும் மனிதன்தான். எனக்கு பிடித்தமான ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். என்னை யாரும் தலைவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னை பின்பற்ற வேண்டும் என்று யாரிடமும் நான் கூறவில்லை. ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கைக்கு ஹீரோ தான். நாம் அடுத்தவர்களை எந்தளவுக்கு துன்புறுத்துகிறோம் என்று நினைத்துப் பார்க்க வேண்டும் என்று நடிகர் சிவகுமார் தனது விளக்கத்தில் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன