கோலாலம்பூர், அக் 31
பெர்சே 2.0வின் முன்னாள் தலைவர் மரியா சின் அப்துல்லாவை அவதூறாக விமர்சித்த டத்தோஸ்ரீ ஜமால் யூனோஸ், அவருக்கு வெ. 300,000 இழப்பீடு தொகையை செலுத்த வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மரியாவின் வழக்கறிஞர் என்.சுரேந்திரன், ஜமாலின் விமர்சனம் மரியாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்து அவப்பெயரை உருவாக்கியிருப்பதாக நீதிபதி டத்தோ முகமட் ஸாக்கி அப்துல் வகாப் தெரித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜமால் தமது தற்காப்பு வாதத்தில் அம்மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்குத் தக்க காரணத்தை விளக்கத் தவறியதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.

எனவே ஜமால் மரியாவுக்கு இழப்பீடாக 300,000 வெள்ளியும் செலவுத் தொகையாக 40,000 வெள்ளியும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மரியாவை அவமதிக்கும் வகையில் விமர்சித்தபோது அவர் பெர்சே 2.0இன் தலைவராக இருந்துள்ளார்.

பெர்சே அமைப்பில் இஸ்லாமிய தீவிரவாதக் கும்பலின் செலவாக்கு நுழைந்துள்ளதாக 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜமால் குறிப்பிட்டிருந்தார். மேலும் பெர்சே 2.0 நாட்டில் உள்ள இரண்டு அனைத்துலக விமான நிலையங்களையும் அரசுக் கட்டடங்களையும் சுற்றி வளைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.