வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > மதுரைவீரனுக்கு நீதி தேவை: இல்லையேல் பிரதமர் அலுவலகத்தின் முன் கூடுவோம்! -அருண் துரைச்சாமி
சமூகம்முதன்மைச் செய்திகள்

மதுரைவீரனுக்கு நீதி தேவை: இல்லையேல் பிரதமர் அலுவலகத்தின் முன் கூடுவோம்! -அருண் துரைச்சாமி

பெட்டாலிங்ஜெயா, நவ. 1
தமது முதலாளியின் 5 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மதுரைவீரன் கிருஷ்ணன் என்பவர் மீது சம்பந்தப்பட்ட முதலாளியின் மனைவி பொய்ப்புகார் அளித்தார். இதனால் மதுரைவீரன் மனஉளைச்சலுக்கு ஆளாகி பின்னர் குற்றமற்றவர் என போலீசாரால் கண்டறியப்பட்டார் . இந்த விவகாரம் தொடர்பில் மதுரைவீரன் மறு புகார் அளித்து விசாரணை நடத்து கொண்டிருந்தபோது வழக்கை பாதியில் நிறுத்தியது நியாயமற்றது. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென ஆகம ஆர்மியின் தலைவரும் மதுரைவீரனின் நீதிக்காக போராடும் அமைப்பின் தலைவருமான அருண் துரைசாமி குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்த சட்டத்துறைத் தலைவர் உடனடியாக உத்தரவு பிறபிக்க வேண்டும். இதுவரையில் இதன் தொடர்பில் பல கடிதங்களை சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பியிருந்த போதும் எந்த பதிலும் இல்லை. நவம்பர் 7ஆம் தேதிக்குள் பதில் தரவில்லை என்றால் அடுத்த நாள் அதாவது நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் அலுவலகத்தின் முன் கூடி அவரிடம் மகஜர் வழங்கப்படுமென அவர் குறிப்பிட்டார். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென மேலிடமும் உத்தரவிட்டதாக செய்திகள் கசிக்கின்றன. அனைத்திற்கும் விசாரணை அவசியம் என்றார் அவர்.

இந்த விவகாரம் தொடர்பில் பொய்ப் புகார் அளித்த அந்த மாதின் மீது வழக்கு விசாரணையில் இருந்தபோது சட்டத்துறைத் தலைவரின் அலுவலகம் இந்த வழக்கை தொடர வேண்டாம் என கேட்டுக் கொண்டது. இதனால் மதுரைவீரன் மனரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார். அதோடு தம்மீதான களங்கத்தை துடைக்க அவர் இந்த வழக்கை தொடுத்தார் என அருண் குறிப்பிட்டார்.

மதுரைவீரன் மீது குற்றமில்லை என்பதை போலீஸ் ஏற்றுக் கொண்டாலும் வழக்கு விசாரணையின் முடிவு அடிப்படையில் பொய்ப் புகார் அளித்த அந்த மாதின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான் தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க முடியும். அதனால், இந்த வழக்கை மீண்டும் தொடங்க வேண்டும் என அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பில் அண்மையில் மலேசிய இந்து சங்கத்தின் உதவியை நாடிய மதுரைவீரன், பின்னர் சட்டத் துறை அலுவலகம் இந்த வழக்கு விசாரணையை தொடர அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டத் துறை தலைவரிடம் அக்டோபர் 18ஆம் தேதி காலை மகஜர் ஒன்றும் வழங்கினார்.

மதுரைவீரன் என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக டான்ஸ்ரீ அந்தஸ்து கொண்ட ஒருவரிடம் கார் ஓட்டுநராகப் பணி புரிந்து வந்துள்ளார். அவர்களின் குடும்ப பிரச்னையில் மதுரை வீரனை பலிகாடாவாக ஆக்கிவிட்டனர் என அருண் துரைசாமி குறிப்பிட்டார்.

டான்ஸ்ரீயின் மகனுக்கும் அவரது மருமகளுக்கும் ஏற்பட்ட பிரச்னை பின்னர் விவாகரத்து வரை சென்றுள்ளது. இந்த விவகாரத்தில் பிள்ளைகளை தாமே வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தை கருத்தில் கொண்டு தம் மீது பாலியல் குற்றச்சாட்டை புகுத்தி பிள்ளைகள் அப்பாவிடம் வளர்வது ஆபத்து என்பதை சுட்டிக் காட்ட முயற்சி செய்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் மதுரைவீரன் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இருந்த போதிலும் அவர் மீது ஏற்பட்ட களங்கத்தால் வேலையின்றி குடும்பத்துடன் கஷ்டப்படுகிறார். போலீஸ் விசாரணையில் அவர் குற்றமற்றவர் என்பது தெரிய வந்தாலும் இந்த சமூகத்தினர் அவரை இன்னும் குற்றவாளியாகவே பார்க்கின்றார்கள். இது மதுரைவீரனின் குடும்பத்தாரையும் பாதித்துள்ளது என அருண் துரைசாமி குறிப்பிட்டார்.

பின்னர் வழக்கறிஞர் திருகுமார் உதவியுடன் மதுரைவீரன் பொய் புகார் செய்த மாதின் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். பொய்ப் புகார் செய்த குற்றம் தொடர்பில் சில நாட்கள் விசாரணை நடைபெற்றது. பின்னர் எந்தக் காரணத்தையும் குறிப்பிடாமல் சட்டத்துறை அலுவலகம் இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. இதன் தொடர்பான செய்தி தமிழ் பத்திரிகைகளில் வெளிவந்த பிறகு இடைத்தரகராக ஒருவர் உள்ளே நுழைந்து பேரம் பேசியுள்ளார். இது குறித்தும் போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது என பெட்டாலிங் ஜெயா கிறிஸ்டல் கிராவுன் தங்கும் விடுதியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அருண் துரைசாமி மேற்கண்டவாறு கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன