வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை! – டத்தோஸ்ரீ சரவணன்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை! – டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர், நவ. 3-

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்) இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான அம்சங்கள் இல்லை. குறிப்பாக தெங்குன், அமானா இக்தியார் கடனுதவித் திட்டங்களில் தனி ஒதுக்கீடுகள் இல்லாதது இந்திய சமுதாயத்திற்கு ஏமாற்றம்தான் என மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் குறிப்பிட்டார்.

டத்தோஸ்ரீ நஜீப் தலைமைத்துவத்தின் போது, இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டிற்காக தனி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் இந்த பட்ஜெட்டில் 10 கோடி வெள்ளி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதியானது இந்தியர்களுக்கான வர்த்தக கடனுதவியில் சேரவில்லை என்பதை சமுதாயம் உணர வேண்டும்.

நம்பிக்கை கூட்டணியின் வெற்றிக்கு இந்தியர்கள் முழுமையான ஆதரவு வழங்கினார்கள். இப்போது தங்களின் தேவைகளையும் கேட்டுப் பெற வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். அதை உணர்ந்து செயல்பட வேண்டும். டத்தோஸ்ரீ நஜீப் தலைமைத்துவத்தில் 7 தமிழ்ப்பள்ளிகள் கட்டப்படுமென அறிவித்தார். இதில் 2 கட்டி முடிக்கப்பட்டது. இப்போது இதர தமிழ்ப்பள்ளிகளின் திட்டம் தொடருமா? என்ற கேள்வியும் சமுதாயத்தின் மத்தியில் எழுகின்றது.

இந்தியர்கள் சார்ந்த பிரச்னைகள் குறித்து எந்த அமைச்சரிடம் அல்லது எந்த இந்திய பிரதிநிதியிடம் பேசுவது என்ற குழப்பமும் இப்போது எழத் தொடங்கியுள்ளது. அதற்கும் விளக்கம் தேவை.

2019ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 5 கோடி வெள்ளி தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், இந்த ஒதுக்கீடு எதற்காக பயன்படுத்தப்படப்போகின்றது என்பதை அரசு அறிவிக்க வேண்டும். இந்த நிதி தமிழ்ப்பள்ளிகளின் பராமரிப்பிற்கா அல்லது கட்டுமானத்திற்கா? என்பதை தெளிவாக கூற வேண்டுமென்றார். தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானங்கள் இந்திய குத்தகையாளர்களுக்கு வழங்கப்பட்டது. நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் அது தொடருமா என்ற கேள்வியை தமிழ் ஊடகங்கள் முன்வைக்க வேண்டுமென ஜாலான் ஈப்போ மங்கள தீபம் கடைக்கு சிறப்பு வருகை புரிந்து அங்குள்ள கடைகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது டத்தோஸ்ரீ சரவணன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

டத்தோஸ்ரீ சரவணன் மக்களுக்காக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பியவர். அதோடு கூட்டரசுப் பிரதேசத்தில் தைப்பூசத்திற்கு விடுமுறை பெற்றுத் தந்தவரும் அவர்தான் என மங்கள தீபம் உரிமையாளர் எல். ஆதித்தன் கூறினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் செந்தூல் போலீஸ் தலைமையகத் தலைவர் ஏசிபி முனுசாமியும் இந்நாள் தலைவர் சண்முகமும் கலந்து கொண்டார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன