சிறார்களைக் கைது செய்வதிலிருந்து தவிர்க்கும் அணுகுமுறை

0
8

கோலாலம்பூர், நவ.8
குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறார்களை போலீஸ் கைது செய்வதிலிருந்து தவிர்க்கும் அணுகுமுறையை அரசு அறிமுகப்படுத்தவிருப்பதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

டைவர்ஷன் எனப்படும் இத்திட்டம் அடுத்த ஆண்டு அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்கள் ஈடுபட்ட குற்றச்செயல் வகை மற்றும் வாழ்க்கைப் பின்னணி அடிப்படையில் அவர்களுக்குப் பயிற்சிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த பயிற்சித் திட்டத்தின்படி சிறு குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறார்கள் கைது செய்யப்பட மாட்டார்கள் என்று சுங்கை பீசி ஆண்கள் பள்ளிக்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தப் பயிற்சித் திட்டத்தில் ஆலோசனை வழங்குதல், மக்கள் சேவை, இழப்பீடு வழங்குதல் அல்லது பாதிப்பு ஏற்படுத்தியவற்றைச் சீரமைத்தல் ஆகியவை அடங்கும். இது உண்மையில் சிறு குற்றச்செயல்களில் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கையினால் அவர்களுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காகவே மேற்கொள்ளப்படுகிறது என மகளிர் குடும்ப சமூகநல மேம்பாட்டுத் துறை அமைச்சருமான வான் அஜிஸா மேலும் கூறினார்.