முகப்பு > முதன்மைச் செய்திகள் > பாலியல் குற்றச்சாட்டு; மதுரைவீரனுக்கு ஆதரவு கோரி  பிரதமர் அலுவலகத்தில் மகஜர்
முதன்மைச் செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டு; மதுரைவீரனுக்கு ஆதரவு கோரி  பிரதமர் அலுவலகத்தில் மகஜர்

கோலாலம்பூர், நவ 9

தனது முதலாளியின் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பொய்யான குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் மதுரைவீரனுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் தரப்பினர் இன்று பிரதமர் அலுவலகத்தில் மகஜரை சமர்பித்ததாக ஆகம ஆர்மியின் தலைவர் அருண் துரைசாமி தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட முதலாளியின் மனைவி தனது 4 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போலீசில் புகார் அளித்தார். அவர் குற்றமற்றவர் என்று கண்டறியப்பட்ட  பின்னர், இவ்விவகாரம் தொடர்பில் மதுரைவீரன் மறு புகார் அளித்து விசாரணை நடந்துக் கொண்டிருந்தபோது வழக்கு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என இதற்கு முன்னர் அவர் கூறியிருந்தார்.

இது தொடர்பில் விசாரணை நடத்த சட்டத்துறைத் தலைவர் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதுவரையில் இதன் தொடர்பில் பல கடிதங்களை சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பியிருந்த போதிலும் எந்த பதிலும் இல்லை. நவம்பர் 7ஆம் தேதிக்குள் பதில் தரவில்லை என்றால் பிரதமர் அலுவலகத்தின் முன் கூடி மகஜர் வழங்கப்படுமென அண்மையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி இந்த விவகாரம் தொடர்பில் மதுரைவீரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் தரப்பினர் பிரதமர் துறை அலுவலகத்திடம் மகஜரை சமர்ப்பித்ததாகவும் அதன் அமைச்சர் வேதமூர்த்தியின் சார்பில் இரு அதிகாரிகள் இந்த மகஜரை பெற்றுக் கொண்டதாகவும் அருண் துரைசாமி தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து முழுமையாக அந்த அதிகாரிகளிடம் விளக்கி கூறியதாகவும் மதுரைவீரனுக்காக போராடுவதற்கான நோக்கத்தையும் அந்த அதிகாரிகளிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த மகஜர் உடனடியாக அமைச்சர் வேதமூர்த்தியின் பார்வைக்கு கொண்டுச் செல்லப்படும் என்றும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அதிகாரிகள் கூறியதாக அவர் சொன்னார்.

மதுரைவீரன் குற்றமற்றவர் என்பதை போலீஸ் ஏற்றுக் கொண்டாலும் வழக்கு விசாரணையில் பொய்ப் புகார் அளித்த அந்த மாதின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான் மதுரைவீரன் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க முடியும். எனவே, இது குறித்து பிரதமர் துறை அலுவலகம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று தாங்கள் நம்புவதாகும் அவர் சொன்னார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன