புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > 7 பேரைப் பற்றித் தெரியாத அளவுக்கு நான் முட்டாள் அல்ல: ரஜினிகாந்த் விளக்கம்!
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

7 பேரைப் பற்றித் தெரியாத அளவுக்கு நான் முட்டாள் அல்ல: ரஜினிகாந்த் விளக்கம்!

சென்னை, நவ.13 :

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரைப் பற்றித் தெரியாத அளவுக்கு நான் முட்டாள் அல்ல என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை போயஸ் இல்லத்தில் இன்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் நேற்று 7 பேர் விடுதலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தெரியாது என்று பதிலளித்தது குறித்து விளக்கம் அளித்தார்.

அது பற்றி அவர் கூறியதாவது, 7 பேர் விவகாரம் பற்றி எனக்குத் தெரியவில்லை என்ற மாயை ஏற்படுத்தப்பட்டு விட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழர்கள் என்று கேட்டிருக்க வேண்டும் என்று பதிலளித்தார். கேள்வியை சரியாக கேட்கவில்லை. ராஜீவ் கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 7 பேரைப் பற்றித் தெரியாத அளவுக்கு நான் முட்டாள் அல்ல. மனிதாபிமான அடிப்படையில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது எனது கருத்து. பேரறிவாளன் பரோலில் வந்த போது கூட அவரிடம் தொலைபேசியில் பேசியிருந்தேன்.

எனக்குத் தெரியும் என்றால் தெரியும் என்று சொல்வேன், தெரியாது என்றால் தெரியாது என்று சொல்வேன்.

மேலும், பாஜக ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு, எதிர்க்கட்சிகள் பாஜகவை ஆபத்தான கட்சி என்று நினைக்கிறார்கள், அதனால் எதிர்க்கட்சிகளுக்கு பாஜக ஆபத்தான கட்சிதான் என்று பதிலளித்தார். இதனை விளக்குமாறு செய்தியாளர்கள் கேட்ட போது, 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறார்கள் என்றால் யார் பலசாலி என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு பயமில்லாமல் போய்விட்டது என்று தமிழக அமைச்சர் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் அப்படி சொல்வது பதவிக்கு அழகல்ல. அவர் போலவே நானும் பேசினால் சரியாக இருக்காது. அவரது பதவிக்குரிய மரியாதையைக் கொடுக்க விரும்புகிறேன் என்று பதிலளித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன