திங்கட்கிழமை, மே 25, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் சர்கார் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது: தயாரிப்பாளர் ஃபாத்திமா விஜய் ஆண்டனி
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

800-க்கும் அதிகமான திரையரங்குகளில் சர்கார் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது: தயாரிப்பாளர் ஃபாத்திமா விஜய் ஆண்டனி

சென்னை, நவ.13 –

விஜய் ஆண்டனி நடித்துள்ள திமிரு புடிச்சவன் படத்தின் வெளியீடு தள்ளிப் போனதற்கும் அதனால் சர்ச்சை எழுந்தததற்கும் சர்கார் படமே காரணம் என தயாரிப்பாளர் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

நம்பியார் படத்தை இயக்கிய கணேஷா, திமிரு புடிச்சவன் படத்தை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். காவல் அதிகாரியான விஜய் ஆண்டனியிடம் ஒரு வழக்கை விசாரிக்கிற நிலை வருகிறது. அது சுற்றி சுற்றி அவர் குடும்பம் வரைக்கும் போய் நிற்கிற மாதிரி பாதிப்பு வந்து விடுகிறது. இதுபோன்ற காவல்துறை தொடர்பான படத்தில் முதல்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. அவருக்கு ஜோடி நிவேதா பெத்துராஜ். நிவேதாவும் இதில் காவலர் வேடம் ஏற்றுள்ளார்.

இந்நிலையில் இந்தப் படம் முதலில் தீபாவளியன்று வெளிவருவதாக இருந்தது. இதற்குத் தயாரிப்பாளர் சங்கமும் அனுமதி அளித்தது. ஆனால் திடீரென தீபாவளிப் போட்டியிலிருந்து விலகியது.

அதேசமயம் தீபாவளிக்கு அடுத்ததாக நவம்பர் 16 அன்று வெளிவருவதற்கு காற்றின் மொழி, செய், உத்தரவு மகாராஜா, சித்திரம் பேசுதடி 2 என நான்கு படங்கள் வெளியாகத் தயாரிப்பாளர் சங்கம் அனுமதியளித்திருந்தது. இந்நிலையில் திடீரென நவம்பர் 16 அன்று திமிரு புடிச்சவன் வெளியாகவுள்ளதாக விஜய் ஆண்டனி அறிவித்தார். இதற்கு இதர நான்கு படங்களின் தயாரிப்பாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

செய் படத்தின் கதாநாயகன் நகுல் ட்விட்டரில், இது மிகவும் சீரியஸான விஷயம். விதிமுறைகள் மீறப்படும் என்றால் அவை எதற்காக உள்ளன? தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவு மதிக்கப்படவேண்டும் என்றார். இதற்கு ஒரு காரணம் உள்ளது. முதலில் செய் படத்துக்கு 150 திரையரங்குகள் கிடைப்பதாக இருந்தது. ஆனால் விஜய் ஆண்டனியின் அறிவிப்புக்குப் பிறகு பாதி திரையரங்குகள் செய் படத்துக்கு அளிக்கவிருந்த ஆதரவை விலக்கிக்கொண்டுவிட்டன. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கம் விடுத்த அறிக்கையில், சிறிய படங்களுக்கு ஒதுக்கப்பட்ட நவம்பர் 16 தேதியில் வேறு படங்கள் வெளியானால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் விஜய் ஆண்டனி படத் தயாரிப்பாளர் ஃபாத்திமா ஆண்டனியின் விளக்கம் வேறுவிதமாக இருந்தது. காற்றின் மொழி படம் நவம்பர் 8 அன்று தான் தணிக்கை செய்யப்பட்டது. ஆனால், திமிரு புடிச்சவன் படம் அக்டோபர் 28 அன்றே தணிக்கைச் சான்றிதழைப் பெற்றுவிட்டது. இதனால் காற்றின் மொழி படத்துக்குப் பதிலாக எங்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்று கூறினார்.

ஆனால் காற்றின் மொழி படத்தின் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் இதை மறுத்தார். விஜய் ஆண்டனி படம் முதலிலேயே நவம்பர் 16அன்று தேதி வாங்கியிருந்தால் பிரச்னையில்லை. ஆனால், நவம்பர் 6 அன்று தேதி வாங்கிவிட்டு திடீரென பின்வாங்கிவிட்டது. எனவே அவர்கள் வரிசையில் நின்றுதான் ஆகவேண்டும். கொடுத்த தேதியைத் தவறவிட்டுவிட்டதால் அவர்கள் இந்த நான்கு படங்களுடன் போட்டி போடமுடியாது. தணிக்கைச் சான்றிதழ் தேதியை வைத்து ஒப்பீடு செய்யக்கூடாது என்று அவர் கூறினார்.

இறுதியில் சித்திரம் பேசுதடி 2 படம் நவம்பர் 16 அன்று வெளியாவதிலிருந்து பின்வாங்கியது. இதையடுத்து திமிரு புடிச்சவன் படத்தை நவம்பர் 16 அன்று வெளியிட தயாரிப்பாளர் சங்கம் அனுமதியளித்தது. பிரச்னையும் ஒருவழியாக ஓய்ந்தது.

திமிரு புடிச்சவன் பட வெளியீட்டில் எழுந்த சர்ச்சைகளுக்குக் காரணமே, சர்கார் படம் அதிகத் திரையரங்குகளில் வெளியானதுதான் என விஜய் ஆண்டனியின் மனைவியும் திமிரு புடிச்சவன் படத் தயாரிப்பாளருமான ஃபாத்திமா விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது:

ஆமாம். எதிர்பார்த்த அளவுக்குத் திரையரங்குகள் கிடைக்காமல் போனதால் குறிப்பிட்ட தேதியில் படத்தை விநியோகஸ்தர்களால் வெளியிடமுடியாமல் போனது. தமிழ்நாட்டில் மட்டும் சர்கார் படம் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது எங்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. எனவே எங்களுக்கு எப்படி அந்தத் தினத்தில் திரையரங்குகள் கிடைக்கும்? திரையரங்குகளை ஒதுக்குவதில் கட்டுப்பாடு கிடையாது. ஆனால் வெளியிடும் தேதியில் மட்டும் கட்டுப்பாடு உண்டு என்று கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன