வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மஇகா தலைமைச் செயலாளராக டத்தோஸ்ரீ வேள்பாரி நியமனம்! மத்திய செயலவையில் ஏகே ராமலிங்கம்
அரசியல்சமூகம்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

மஇகா தலைமைச் செயலாளராக டத்தோஸ்ரீ வேள்பாரி நியமனம்! மத்திய செயலவையில் ஏகே ராமலிங்கம்

கோலாலம்பூர், நவ. 14-

மஇகாவின் தலைமைச் செயலாளராக டத்தோஸ்ரீ சா.வேள்பாரி நியமிக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அறிவித்தார். இது நாள் வரை கட்சியில் பொருளாளராக இருந்த டத்தோஸ்ரீ வேள்பாரி தமது தலைமையின் கீழ் கட்சியின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கட்சியின் தேசிய பொருளாளர் பதவிக்கு டத்தோ அம்ரிட் கோர் மட்ஜிட் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். சவாலான பொறுப்பு என்றாலும் அதை ஏற்க ஒரு பெண்மணி முன்வந்திருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்ட டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவரின் நியமனம் கட்சியை அனைத்து நிலைகளிலும் மேம்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.

டத்தோ அம்ரிட் கோர் மட்ஜிட் சிங்

கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் பொறுப்பு சிப்பாங் மஇகா தொகுதி தலைவர் குணாளன் வேலுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. கட்சியில் உருமாற்றம் அவசியம். வருங்கால சவால்களை எதிர்கொள்ளவும் கட்சியில் உள்ள உறுப்பினர்களின் நலனைப் பாதுகாக்கவும் தமது தலைமையிலான மத்திய செயலவை சிறந்த முறையில் செயல்படும் என அவர் தெரிவித்தார்.

மாநில தலைவர்கள் நேரடியாக மத்திய செயலவையில் அங்கத்துவம் பெறும் நிலையில் தலைவர் நியமனமாக 9 பேரை டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மத்திய செயலவையில் நியமித்துள்ளார். முருகவேலு மத்திய செயலவைக்கு இடம் பெற்றுள்ள வேளையில் சிலாங்கூர் மாநில முன்னாள் தலைவர் டத்தோ எஸ்.எம்.முத்துவும் மத்திய செயலவையில் இடம் பெற்றுள்ளார். உமா ராணி குழும உரிமையாளரும் அண்மையில் நடைபெற்ற கட்சியின் உதவித் தலைவருக்கான தேர்தலில் 100 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட ஏ.கே.ராமலிங்கமும் மத்திய செயலவையில் இடம் பெற்றுள்ளார்.

டத்தோ பாலகிருஷ்ணன், முன்னாள் செராஸ் தொகுதி தலைவர் டத்தோ பெருகருப்பன், டத்தோ முனியாண்டி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மத்திய செயலவையில் இடம் பெற்றுள்ள வேளையில் தலைமைச் செயலாளர், பொருளாளர் ஆகிய பொறுப்புகளை ஏற்றுள்ள டத்தோஸ்ரீ வேள்பாரியும் டத்தோ அம்ரிட் கோரும் மத்திய செயலவையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன