சிரம்பான், நவ 16
நெகிரி செம்பிலான், ரந்தாவ் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் நடந்து முடிந்த 14ஆவது பொதுத் தேர்தலில் ரந்தாவ் சட்டமன்ற தொகுதியில் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று சிறப்பு தேர்தல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், ரந்தாவ் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்த அது உத்தரவிட்டுள்ளது.

அம்னோவின் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ முகமட் ஹசான் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியின்றி வென்றதாக அறிவிக்கப்பட்டதை தொடந்து, அதனை எதிர்த்து பிகேஆர் கட்சி வழக்கு தொடுத்தது.

இத்தொகுதியில் பிகேஆர் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த டாக்டர் ஸ்ரீராம் வேட்பு மனுதாக்கல் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டாமல் தடுத்து வைக்கப்பட்டார். கடைசி நிமிடங்களில் உள்ளே அனுமதிக்கப்பட்டபோது வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவதற்கான நேரம் முடிந்துவிட்டது என்று கூறப்பட்டது. இதனால் பிகேஆர் வேட்பாளரான டாக்டர் ஸ்ரீராம் வழக்கு தொடுத்தார்.

இந்நிலையில், டத்தோஸ்ரீ முகமட் ஹசான் வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்துள்ளாதல் ரந்தாவ் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும்.