காஜா புயலால் திருச்சியில் விமான சேவை பாதிப்பு

0
15

திருச்சி, நவ 16
காஜா புயலால் இன்று அதிகாலை முதல் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் திருச்சியில் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் சார்ஜாவிலிருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், திருச்சியில் தரையிறங்க முடியாமல் கொச்சினுக்கு திருப்பி விடப்பட்டது.

இதே போல் சென்னையிலிருந்து திருச்சிக்கு தாமதமாக வந்த விமானம் திருச்சி விமான நிலையத்தை நெருங்கியது. அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்ததால் அந்த விமானம் தரையிறங்க முடியாமல் வானில் 3 முறை வட்டமடித்தது. பின்னர் மீண்டும் தரையிறங்குவதற்காக முயற்சி மேற் காள்ளப்பட்டது.

ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அந்த விமானம் மீண்டும் சென்னைக்கே திருப்பி விடப்பட்டது.

இதனிடையே, காஜா புயல் நேற்று நள்ளிரவு கரையை கடந்த போது நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மிக பலத்த சேதம் ஏற்பட்டது. ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.

புயலின் வேகம் அதிகமாக இருந்ததால் ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்து விட்டது. பல இடங்களில் பெரிய பெரிய மரங்கள் மின் வயர்கள் மீது விழுந்ததால் கம்பிகள் அறுந்து விழுந்து கிடக்கிறது.

ஆயிரக்கணக்கான இடங்களில் டிரான்ஸ் பார்மர்கள் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது.

தஞ்சாவூரில் 5 ஆயிரம் மின் கம்பங்கள், திருவாரூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் மின் கம்பங்கள் நாகை மாவட்டத்தில் 4 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்து கிடக்கிறது. இவற்றை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள்.