சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > தேசிய நிலையிலான ரோபோடிக் போட்டி : சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி வாகை சூடியது!
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தேசிய நிலையிலான ரோபோடிக் போட்டி : சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி வாகை சூடியது!

பெட்டாலிங், நவ. 16-

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கிடையிலான தேசிய ரோபோடிக் போட்டியில் சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி வாகை சூடியது. இப்போட்டியில் 14 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 30 அணிகள் கலந்து கொண்ட வேளையில் இறுதிப் போட்டிக்கு 10 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 10 அணிகள் தகுதி பெற்றன.

மலேசிய இலக்கவியல் பொருளாதாரக் கழகம், கிரோடச் & ரோபோடிக் கல்வி நிலையம், மலேசிய சபா பல்கலைக்கழகம் ஏற்பாட்டில் துணை கல்வி அமைச்சர் அலுவலகத்தின் ஆதரவின் பேரில் இறுதிப் போட்டி பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் நடந்தது.

இறுதிச் சுற்றில் விவேகானந்தா தமிழ்ப்பள்ளியை வீழ்த்தி, சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி முதல் பரிசை வென்றது. முதல் பரிசை வென்ற அணிக்கு 500 வெள்ளி ரொக்கமும் சான்றிதழும், சுழல் கிண்ணமும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தை பிடித்த பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளிக்கு 300 வெள்ளி ரொக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்ட வேளையில் இப்போட்டியில் 3ஆம் இடத்தை பிடித்த வெஸ்ட் கண்ட்ரி பாராட் தமிழ்ப்பள்ளிக்கு 200 வெள்ளி ரொக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

இப்போட்டியின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ், பரிசுகளை எடுத்து வழங்கினார். முன்னதாக இப்போட்டியின் தொடக்க விழாவில் கல்வித் துறை துணையமைச்சர் தியோ நீ சிங் கலந்து கொண்டார்.

நாடு அடுத்த இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்கி விட்டது. நமக்கு பிடிக்கின்றதோ இல்லையோ தொழில்துறை 4.0ஐ பின் தொடர்ந்தாக வேண்டும். அனைத்தும் இப்போது எந்திரமயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. நாமும் அதை நோக்கி உடனடியாகப் பயணிக்க வேண்டும் இல்லையேல், பின்தங்கி விடுவோம் என கணபதி ராவ் கூறினார்.

1970ஆம் ஆண்டு தென் கொரியா, மலேசியாவைவிட பின்தங்கியிருந்தது. ஆனால் இன்று நாம் தொட முடியாத அளவிற்கு வளர்ச்சி கண்டு விட்டார்கள். இவை அனைத்திற்கும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிதான் காரணமென அவர் சுட்டிக்காட்டினார். தொழில்துறை 4.0 முழுமையாக செயல்படுத்தப்படும் போது, மருத்துவ துறையின் மீது இந்திய சமுதாயம் கொண்டிருக்கும் மோகம் குறைந்துவிடும். இப்போது வழக்கறிஞர் துறைக்கான மோகமும் குறைந்து விட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ரோபோடிக் துறையில் பின்தங்கிவிடக்கூடாது என்பதற்காக இதுபோன்ற போட்டிகளை ஏற்பாடு செய்து மாணவர்களுக்கு ஊக்கமளித்த ஏற்பாட்டுக் குழுவினரையும் தாம் பாராட்டுவதாக கணபதி ராவ் கூறினார். தொழில்துறை 4.0 மேம்பாட்டில் பி 40 பிரிவின் கீழ் இருக்கும் மாணவர்கள் பின்தங்கிவிடக்கூடாது என்பதற்கான இப்போட்டியின் அவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டதாக கிராபோர்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டேனீப் குமார் செல்வகுமரன் தெரிவித்தார்.

குறிப்பிட்ட சில தமிழ்ப்பள்ளிகளில் ரோபோடிக் சார்ந்த வகுப்புகளை தமது நிறுவனம் முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதில் பலர் தொண்டுழீயர்களாக பணியாற்றுகிறார்கள். இது முழுக்க முழுக்க இந்திய சமுதாய மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கை என அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் மலேசிய இலக்கவியல் பொருளாதார கழகத்தின் உதவித் தலைவர் சுமித்ரா நாயர், மலேசிய சபா பல்கலைக்கழகத்தின் ரோபோட்டிக் மற்றும், நிபுணத்துவ தலைவரும் மற்றும் மலேசிய அறிவார்ந்த புத்தாக்க இயக்கத்தின் ஆலோசகருமான பேராசிரியர் டாக்டர் முரளிதரன் முனியப்பன், மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வர்த்தகத் மற்றும் மூத்த பொறியியல் நிர்வாகி டாக்டர் ரவிந்திரன், மலேசிய அறிவார்ந்த புத்தாக்க இயக்கத்தின் தலைவர் அறிவேந்திரன் நாயர் உட்பட 100க்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோரும் கலந்து கொண்டார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன